சித்தர் ரகசியம் - 13
குண்டலினி சக்தியின் அதிர்வலைகள், உயிரை இயக்குகிறது. உயிர் உடம்பை இயக்குகிறது. இது மட்டுமல்ல, உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் குண்டலினி சக்தியின் வெளிப்பாடு சூட்சமமாக நிறைந்திருக்கிறது. இது மனித உடம்பில் நாடிகளின் மூலம் தனது இயக்கத்தை கொண்டுச்செல்கிறது. இந்த நாடிகள் அதமுகமாய் அதாவது கீழ் நோக்கி செயல்படுகிறபோது பஞ்ச பூதங்களின் கலவைகளான உடம்பு சம்மந்தப்பட்டு கருவிகள் மூலமும், கர்ம இந்திரியங்கள் மூலமும் விழிப்படைகிறது. இந்த விழிப்பு நிலையில் உடம்பும், மனதும் சிற்றின்பத்தை நோக்கி ஓடுகிறது. சிற்றின்பத்தை ஆனந்த மயமாக பார்க்கிறது.
இதே சக்தி, ஊர்த்துவ முகமாய் அதாவது மேல் நோக்கி எழும் போது சகஸ்ர தளத்தில் ஆற்றலான தனது நிஜ உருவத்தை இழந்து அறிவுமயமாக மாறுகிறது. அதாவது மனித உடம்பில் ஆற்றலானது சகஸ்ரத்தில் அறிவுமயமாகி அன்பில் ஒடுங்குகிறது. இப்படி அன்பில் ஒடுங்கும் நிலையை நமது சித்தர்கள் சிவசக்தி ஐக்கிய நிலை என்றார்கள். சிவசக்தி ஐக்கியமே மனித உடம்பில் உள்ள ஷோம, சூரிய, அக்னி என்ற மும்மண்டலங்களாக ஒளிர்கின்றன.
சிவசக்தி வடிவான குண்டலினி சக்தி மூலாதாரம் முதல், சகஸ்ரதளம் வரையில் உள்ள ஷட் சக்கரங்களை தனது சூட்சம உடம்பாக எடுத்துக் கொள்கிறது எனலாம். அப்படி எடுத்து கொண்டதனாலேயே சக்தி வசப்பட்ட சிவம் அல்லது சிவம் வசப்பட்ட சக்தி ஸத்-சித்-ஆனந்தமாக பரிணமிக்கிறது. அதாவது குண்டலினி சக்தி எழுச்சி ஜீவனை அம்மையப்பனை நோக்கி தள்ளிச்செல்கிறது. இதை நமது கண்களால் காண முடியாது, காதுகளால் கேட்க முடியாது, நம்மிடம் இருக்கும் புலன்கள் எதற்கும் அதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை.
ஆனால் அந்த ஆனந்தநிலையம் நமக்கு தெரியும். நாம் அதை அனுபவிப்போம். காரணம் நமது ஆத்மாவில் உள்ள மூன்றாவது கண், சிவசக்தி ஐக்கியத்தை கானவல்லதாக இருக்கிறது. இப்படி சிவசக்தி ஐக்கியமாகி ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற எழுச்சி பெற்ற குண்டலினியை புஜங்கி, சப்தபிரம்மம், பிராணசக்தி, ப்ரகிரிதி, மாத்ருகா, ஈஸ்வரி, குடிலங்கி என்ற சிறப்புப்பெயர் கொடுத்து லலிதா சகஸ்ரநாமம் சிறப்பித்து கூறுகிறது.
மனித உடல், பஞ்சபூதங்களால் செய்யப்படுவது உண்மை. அப்படி செய்யப்படுகிற உடல்கள் அனைத்தும், ஒரே விதமாக இல்லாமல் பலவிதமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. ஒரு உடல் அழகாக இருக்கிறது. இன்னொன்று அழகுக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. ஒன்று பரிபூரணமாக இயங்கக்கூடிய விதத்தில் இருக்கிறது. மற்றது இயங்க முடியாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு உடலும் தனித்தனி விதமாக சிருஷ்டிக்கப்படுவதற்கு என்ன காரணம் சந்தேகமே இல்லை. உயிர்களின் முன்வினை பலன்தான். சரீரத்தின் வடிவமாக உயிர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இப்படி உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கருத்துக்களை நமது சித்தர்கள் தெளிவாக கூறுகிறார்கள்.
உலகை படைப்பதற்கு விருப்பமுடைய இறைவன் முதலில் உயிரையும்,பிரகிருதியையும் பிணைக்கிறார். பிரகிருதியில் இருந்து சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகிய முக்குணங்கள் பிறந்து அவைகள் உயிரையும், உடம்பையும் பிணைக்கின்றன. முக்குணங்கள் வெளிப்படையாக தோன்றுவது இல்லை. ஆனால் பிரகிருதியோடு சேர்க்கை பெறும்போது அவ்யத்தம் என்ற வெளிப்படும் பொருளாக மாறுகிறது. ஆனாலும் இதற்கு முழு உருவம் கிடையாது. குணங்களுக்கு உருவங்கள் இல்லை என்றாலும் வெளியில் தெரிவது எப்படி? என்று கேட்கலாம்.
சூரியனின் வெளிச்சம் இன்ன நிறத்தில் உள்ளது என்று சொல்ல முடியாது. காரணம் அது நிறம் இல்லாதது. ஆனால் அந்த நிறம் அற்ற நிலையில் இருந்தே ஏழு வண்ணங்களும் தோன்றுகிறது. அதுபோலவே முக்குணங்களும் மூல பிரகிருதியில் மறைந்திருக்கும் சுத்த சத்துவ நிலையில் தோன்றுகிறது. நீராவி கையில் பிடிக்கும் அளவிற்கு திடம் இல்லாதது, உருவம் இல்லாதது, காற்றைப்போல நாலாத்திசையிலும் அலையக்கூடியது. ஆனால் அதே நீராவி நெருக்கம் அடையும் போது மேகமாக மாறி மழையாக கொட்டுகிறது. பிரகிருதியிலும் நீராவி போல மிதந்து கொண்டிருந்த முக்குணங்கள் சுத்தசத்துவம் என்ற நெருக்கத்தை அடையும் போது உருவமாக மாறுகிறது. அதாவது இதன் விளக்கம் என்னவென்றால் உடல் முழுவதும் பரவியிருக்கும் முக்குணங்கள் உடலின் நெருக்கத்தால் மனம் என்ற ஒன்றாக உருவாகிறது.
முக்குணங்களில் சத்வ குணம் என்பது நிர்மலத்தன்மை உடையது, ஒளிமயமானது, ஞானம் நிறைந்தது. சன்மார்க்கத்தில் ஈடுபடக்கூடியது. சிற்றின்பத்தை புறம் தள்ளுவது இதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஞானிகள், மகான்கள், முனிவர்கள் இவர்கள் நாட்டையும், காட்டையும், உறவையும், பகையையும், பொன்னையும், மண்ணையும் ஒன்றாக கருதுபவர்கள். இந்த சத்வகுணம் இவர்களுக்கு மனதிலிருந்தே தோன்றுகிறது. இப்படி மனதிலிருந்து தோன்றுகிற இன்னொரு குணம் ரஜோ குணம். இது விருப்பமே வடிவெடுத்தது, ஆசைமிகுந்தது. மனிதனை தொழில் செய்யத்தூண்டுவது, உட்காராதே எழுந்து ஓடு, வேண்டிய மட்டும் உழை என்று துரத்தும். வெற்றி வந்தால் சிரிக்கச்செய்யும். தோல்வி வந்தால் அழவைக்கும்.
மூன்றாவதாக உள்ள தமோ குணம் மயங்குவது, மயக்க வைப்பது. எல்லாம் முடிந்தது போடா என்று சலிப்பைத்தருவது. அப்பன் - பாட்டன் சோறு போடுவான் என்று சோம்பிக்கிடப்பது, அறியாமை நிறைந்தது. அடுத்தவன் சொத்தை அபகரிக்கவும் காத்திருக்ககூடியது. இந்த மூன்று குணங்களுமே பிரகிருதி மூலமாக நமது உடம்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும், கிருஷ்ணனும் இருக்கிறான், அர்ஜுனனும் இருக்கிறான், சகுனியும் இருக்கிறான். இந்த மூன்று குணங்களுமே, நமது மனதின் வெளிப்பாடு. நமது மனம் இப்படித்தான் செய்யப்பட்டது, இப்படித்தான் இயங்குகிறது. இந்த இயக்கம் நமது நாடிகள் வழியாக எப்படியெல்லாம் உடம்பிற்குள் ஊர்ந்து செல்கிறது. அதன் வழியாக குண்டலினி கொண்டுவரும் தெய்வீக சக்திகள் எப்படியெல்லாம் நடந்து நம்மை கடந்து செல்கிறது என்று சித்தர்கள் கூறுகிற இரகசியத்தை அடுத்து சிந்திப்போம்