Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது?


சித்தர் ரகசியம் - 12

    சித்தர்களின் தத்துவப்படி உடலை பாதுகாப்பது எதற்காக? குடித்து, கும்மாளம் போட்டு குழந்தைக்குட்டிகளை பெற்றெடுத்து, வியாதி வெக்கையில் மாண்டு போவதற்காகவா? நிச்சயம் கிடையாது. ஆற்றை கடந்துச்செல்வதற்கு படகு எப்படி பயன்படுகிறதோ அதேபோல கர்மா என்ற சமுத்திரத்தை கடந்து செல்ல உடம்பு பயன்படுகிறது. உடம்பு ஓட்டைப்படகாக இருந்தால் பயணம் பாதிவழியில் நின்றுவிடும். அடுத்த பயணத்திற்கு வேறு படகு தேடவேண்டிய சூழல் வரும். எனவே கைவசம் இருக்கின்ற படகையே சரியான முறையில் செப்பனிட்டு அந்த படகினால் இந்த ஜென்மாவிலேயே சம்சார பந்தத்தை கடந்து, இறைவனின் பாதார விந்தத்தை அடைந்து விடலாம் அதனால் தான் உடலினை உறுதி செய் என்றார்கள் சித்தர்கள்.

உடலை உறுதி செய்தால் மட்டும் போதுமா? அந்த உடல் மூலம் இறைவனை நோக்கிய பயணத்தை செய்ய வேண்டாமா? என்றால் அந்த பயனப்பாதையாக சித்தர்கள் நமக்கு காட்டியது குண்டலினி சக்தியாகும். இது என்ன புதுக்கருத்து. குண்டலினி என்பதை தியான வழியில் செல்பவர் பேசுவதை கேட்டிருக்கிறோம்.யோகத்தை பற்றிய விளக்கங்கள் சொல்லும்போது அறிந்திருக்கிறோம். சித்தர்கள் வழியில் கூட குண்டலினி வருகிறதா? என்று சிலர் கேட்கலாம். சித்தர்களின் மிக முக்கியமான நோக்கமே மனிதர்களின் குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி விடுவதே ஆகும்.

மூல நெருப்பை மூட்டிவிட்டு
நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு
பசியில்லாமல் இருப்பது எக்காலம்

என்று பத்ரகிரியார் பாடுகிறார். மூல நெருப்பில் சுண்ட காய்ச்சி கிடைப்பது நிலாவிலிருந்து கிடைக்கின்ற பால் அல்ல. நமக்குள் ஏற்படும் இறை தரிசனம் என்ற அற்புதமான பாலாகும். இந்த பாலை அருந்துவது தான் மனிதப் பிறவியின் மூல நோக்கம் என்பது அவர் கருத்து. பத்ரகிரியார் போன்ற சித்தர்கள் அனைவரின் கருத்துமே குண்டலினி சக்தியை எழுப்பி இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது தான்.

குண்டலினி என்றால் என்ன? இந்த வார்த்தையை பலமுறைக்கேட்டாலும் இதன் பொருள் நமக்கு விளங்கவில்லையே என்று சிலர் யோசிப்பது உண்டு. இதற்கான விடையை சாண்டில்ய உபநிஷத், யோககுண்டலினி உபநிஷத், தேஜோபிந்து உபநிஷத், பதஞ்சலி யோகசூத்திரம், யோக வாசிஷ்டம், திருமந்திரம் உட்பட அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் தங்களது படைப்புகளில் மிக அழகாகச்சொல்லி இருக்கிறார்கள். இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவலை படித்தாலே போதும்.

மனித உடம்பாக இருக்கட்டும், மற்ற ஜீவராசிகளின் சரீரங்களாக இருக்கட்டும், அவைகள் இயங்குவதற்கு மிக முக்கியமாக உயிர் தேவை உயிர் இல்லை என்றால் எதுவும் நடக்காது. உயிர், உயிர் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறோமே அந்த உயிர் என்றால் என்ன? அது உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியிருக்கின்றன. சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து கூறுகின்ற விஞ்ஞானிகள் கூட உயிர் என்றால் என்னவென்று விளக்கம் தந்திருக்கிறார்களா? நாம் தான் அதை கேட்க நினைத்திருக்கிறோமா? இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்புகிற இதயம் எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியும். இரத்தத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை வடிகட்டி வெளியே அனுப்புகிற சிறுநீரகங்கள் இருக்குமிடம் நாம் அறிந்ததே. உணவை செரிமானம் செய்கின்ற குடல் நாம் அறிந்ததே. ஈரல் இவைகள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறது எப்படி செயல்புரிகிறது என்று நமக்கு தெரியும். ஆனால் இவைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயங்கச்செய்கிறதே உயிர் அது உடம்பிற்குள் எந்த பகுதியில் இருக்கிறது? அதன் வடிவம் என்ன?

உயிர் என்பது ஓர் உறுப்பு அல்ல. எலும்போ, நரம்போ அல்ல. துடிப்பின் மூலம் தனது இருப்பைச்சொல்லும் நாடிகளும் அல்ல. மனம் என்ற ஒன்று அதாவது சிந்திக்கின்ற சக்தி மூளையில் இருப்பதாக கூறுகிறார்களே. அந்த மூளையின் ஒரு செயலாக இருப்பதும் உயிர் அல்ல. உண்மையில் சொல்லப்போனால் உயிர் என்பது நமது உடம்பிற்குள் ஒரே ஒரு பகுதிக்குள் உட்கார்ந்திருக்கின்ற வஸ்து அல்ல. நமது உடல் முழுவதும் உள்ளும் வெளியையும் ஒவ்வொரு மயிர்க்காலிலும் கூட உயிரானது இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வாக இல்லை, துடிப்பாக இல்லை நாம் உணர்ந்துக்கொள்ள கூடிய எந்த வகையிலும் அது இல்லை. ஆனாலும் அது இருக்கிறது அது இல்லாமல் எதுவுமே நடப்பது இல்லை. அது இல்லை என்றால் ஒரு வினாடியில் சப்தநாடியும் அடங்கிவிடும்.

அப்படி என்றால் உயிர் என்பது என்ன? உடம்பிற்குள் ஓடுகிற வெளிச்சமா? அல்லது பிராண வாயுவை உடல்முழுவதும் பரவச்செய்கின்ற சுவாசமா? என்று கேட்டால் சித்தர்களிடம் இருந்து மிக விசித்திரமான பதில் வருகிறது. உலகிலேயே உயிர் என்றால் என்னவென்று சொன்னவர்கள் இந்திய சித்தர்களாக மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் சித்தாந்தத்தை மறுத்து ஒதுக்கக்கூடிய விஞ்ஞானம் இதுவரை பிறக்க வில்லை. சித்தர்கள் உயிரை சத்தம் என்கிறார்கள், ஒலி என்கிறார்கள், நாதம் என்கிறார்கள். உயிர் ஒலியாக இருப்பதனால் தான் உயிரைக்கொடுத்த இறைவனையும் நாதவடிவாக நமக்கு காட்டி இருக்கிறார்கள்.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, மூழ்கி குளிக்கும் அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி குளிக்கும் போது தண்ணீருக்கடியில் நாம் செல்லுகின்ற போது வெளியில் உள்ள ஓசை, ஒலியெல்லாம் நமக்கு கேட்காது. சுத்தமாக வெளி சத்தங்கள் அடங்கிவிடும். அப்போது நமது மண்டைக்குள் ஒரு ஓசை கேட்கும். ஹ...ம் என்ற சத்தத்தை தவிர வேறு எதையும் நாம் கேட்பதே இல்லை. சந்தேகமே வேண்டாம் அந்த சத்தம் தான் நமது உயிர். கைதேர்ந்த வைத்தியர்கள் ஒரு மனிதனின் நாடியை பிடித்து பார்த்து அவன் உடம்பிற்குள் கேட்கின்ற இந்த சத்த அதிர்வை துல்லியமாக கணித்து, அவன் இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்பான் என்பதை கூறி விடுவார்கள். சரி ஓசை என்பது தான் உயிர் என்று சித்தர்கள் கூறி விட்டார்கள். அந்த ஓசை என்ற உயிர் நமது உடம்பில் எங்கே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியிலா? அல்லது உடல் முழுவதுமா?

உயிரின் ஓசையானது உடல் முழுவதும் தனது அதிர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அந்த உயிர், உடம்பு முழுவதும் மையம் கொண்டு இருக்கவில்லை. உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அது உட்கார்ந்திருக்கிறது. அங்கே இருந்துகொண்டு செயலாற்றல் புரிகிறது என்று கூறும் நமது சித்தர்கள், அந்த பகுதி நமது நாபிக்கமலம் அதாவது தொப்புள் பகுதி என்கிறார்கள். இப்போது நாம் மூக்கு வழியாக காற்றை இழுத்து நுரையீரலுக்கு அனுப்பி சுவாசிக்கிறோம். ஆனால் அம்மாவின் கருவறையில் நாம் இருக்கும் போது நம்மைச்சுற்றி தண்ணீர் மட்டுமே இருந்தது. அங்கே மூக்கு வழியாக மூச்சு விட முடியாது. தொப்புள்கொடி வழியாகத்தான் சுவாசித்திருக்கிறோம். எனவே முதல் சுவாசம் வந்த வழியில் தான் உயிரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

உயிர் இங்கே இருந்து கொண்டு தான் உடம்பை ஆள்கிறது. இந்த உயிரையும் இயக்கக்கூடிய அதாவது மிக கூர்மையோடு இயக்க கூடிய ஒரு சக்தி நமது மூலாதாரத்தில் அதாவது பிறப்புறுப்பில் அடங்கி கிடக்கிறது. அந்த சக்தி பாம்புபோல இருக்கிறது என்று சொன்னாலும் கூட அது ஒரு மின்னல் போல பளீச்சென்று கீழே இருந்து மேல்நோக்கி படருகின்ற மின்சாரக்கொடியாகும். அந்த மின்சாரக்கொடியின் இன்னொரு பெயர் தான் குண்டலினி. இந்த குண்டலினி சக்தி ஊர்வன மற்றும் மிருகங்கள் உடம்பில் படுத்த நிலையிலும், பறவைகளுக்கு சாய்ந்த நிலையிலும் இருக்கிறதாம். மனிதர்களுக்கு மட்டும் தான் செங்குத்தாக வானத்தை நோக்கிய வண்ணம் இறைவனோடு இணக்கம் வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறதாம்.


Contact Form

Name

Email *

Message *