சித்தர் ரகசியம் - 8
உலகின் மிகப்பெரிய அதிசயம் எது? என்று நீங்கள் எப்போதாவது தேடி பார்த்ததுண்டா? சீனப்பெருஞ்சுவர், தாஜ்மகால், சாய்ந்த கோபுரமென்று சில விஷயங்களை அதிசயம் என்ற பட்டியலுக்குள் சேர்த்து நாம் பார்க்கிறோம். இந்த பொருள்களின் மீது ஏற்படுகின்ற வியப்பினாலே உண்மையில் இவைகள்தான் அதிசயமென்று முடிவுக்கும் வந்துவிடுகிறோம். உண்மையில் இவைகள் அதிசயமா? இவற்றை தாண்டிய அதிசயங்களும் உண்டா? நிச்சயம் இருக்கிறது. அது வேறு எங்கோ கண்ணுக்கு காணாத இடத்தில் பயணம் செய்து பார்க்க வேண்டிய தூரத்தில் இல்லை. நம் அருகில், நமக்கருகில் நம்மோடு இணைந்தே அந்த அதிசயம் இருக்கிறது.
ஒரு பாத்திரத்தில் குழம்பு வைக்கிறோம் அந்த பாத்திரம் ஓட்டை என்றால் அதில் குழம்பு தங்குமா? ஏரிக்கரையை மேடாக்கி மதகுகளை அடைத்து நீரை தேக்குகிறோம். மதகு ஒட்டையானால் தண்ணீர் நிற்குமா? ஆனால் நமக்கு பக்கத்தில் உள்ள அதிசய பொருளுக்குள் தண்ணீர் மட்டுமல்ல எவராலும் பிடித்து வைக்க முடியாத காற்று நிற்கிறது. அதிலும் அந்த பொருளில் ஒரு ஓட்டை அல்ல. ஒன்பது ஓட்டைகள் இருக்கிறது ஆனாலும் காற்று வெளியில் செல்லாமல் வருடக்கணக்கில் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது நான் அதிசயப்பொருள் என்று எதை குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் ஓரளவு புரிந்திருப்பீர்கள். ஆமாம் நிச்சயமாக நமது உடம்பை தான் அதிசயத்திலும் அதிசயம் என்று கூறுகிறேன்.
உடம்பை அதிசயம் என்று சொன்னவுடன் சித்தர்கள் “ஊத்தை சடலம் உப்பு உள்ள பாண்டம்” என்றெல்லாம் உடம்பை வெறுக்கிறார்களே, நெருப்பை வளர்த்து நீருக்குள்ளே நின்று கைகால் உறுப்புகளை அறுத்துப்போட்டு பட்டினியால் வயிற்றைச்சுருங்க செய்து இன்னும் எண்ணிலடங்காத சோதனைகளுக்கு ஆட்படுத்தி தவம் செய்கிறார்களே சில முனிவர்கள் அவர்கள் இறைவனின் பாதையை நோக்கி மனிதன் முன்னேறுகிற போது உடம்பு என்பது பெரிய தடை. அதை எப்படியாவது உதறித்தள்ள வேண்டும் என்ற வகையில் கருத்து தெரிவிக்கிறார்களே அனுபவத்தில் பார்த்தாலும் அவர்கள் கூறுவது சரியாகத்தானே இருக்கிறது. ஆசைகளுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இந்த உடம்பு தானே இருக்கிறது பிறகு எதற்காக இதை அதிசயப்படைப்பு என்று வியந்து கூறி பாராட்ட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம்.
சில சித்தர்கள் உடம்பை வெறுத்தவர்களாக, புறந்தள்ளியவர்களாக இருந்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் பல சித்தர்கள் உடம்பை வெறுக்கவில்லை. மாறாக அதை வளர்ப்பதற்கு வழி சொன்னார்கள். பதஞ்சலி மகரிஷியும், திருமூலரும் உடம்பை முக்தி என்ற இலக்கை நோக்கி பயணிக்க, சம்சார சாகரத்தில் உடம்பு படகாக இருக்கிறது என்று சொன்னார்கள். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று கூறிய திருமூலர் அந்த உடம்பு ஆயிரம் ஆண்டுகள் கூட வைரம் வாய்ந்த தன்மையோடு வாழ்வதற்கு வழி கூறி இருக்கிறார். மனித சரீரத்தைப்பற்றி விளக்கி இருப்பதை பார்க்கும் போது இன்றைய நவீன உடற்கூறு மருத்துவம் அவர் வகுத்த பாதையில் இன்னும் கால்பங்கு கூட பயணித்து வரவில்லை என்பது தெரிகிறது. உடம்பை எதற்காக வளர்க்க வேண்டும். அறுசுவை உணவை உண்பதற்காகவா? ஆடல் மகளீரின் அழகில் போதையேறி கிடக்க வேண்டும் என்பதற்காகவா? இரண்டுமே இல்லை.
நமது மனம் இருக்கிறதே அது ஒரு விந்தையான எந்திரம். அந்த எந்திரம் சரீரத்தில் மட்டும் தான் வேலை செய்யுமே தவிர சரீரத்தை தாண்டுவதற்கு விரும்பாது, வேலை செய்யாது. ஆனால் அந்த மனதை, சரீரத்தை தாண்டி பிரபஞ்சவெளியில் இருக்கும் இறைசக்தியோடு ஆத்மாவை இணைப்பதற்காக வெளியில் இழுக்க வேண்டும். அது சாதாரண போராட்டம் அல்ல. சந்திரகுப்த மெளரியனும், மகாஅலெக்ஸ்சாண்டரும் மோதிக்கொள்ளும் யுத்தத்தை விட கொடுமையானது. அந்த போரை நடத்த, அதாவது அடங்காத மனதை அடக்க வலுவான உடம்பு வேண்டும். குஸ்திக்கு போகும் பயில்வான் போல, உடம்பு இருந்தால் தான் ஒருவனால் தியானத்தில் வெல்ல முடியும். கத்திரி வெயிலில் ஒருதுளி தண்ணீர்பட்டால் கூட இழுத்துக்கொண்டு படுத்துக்கொள்ளும் நோஞ்சான்களால் தியானத்தில் வெற்றிபெற முடியாது. எனவே திடகாத்திரமான உடம்பு வேண்டும்.
உடம்பு என்பது என்ன? அது எப்படிபட்டது? என்று சித்தர்கள் தருகின்ற விளக்கத்தை பார்த்தாலே நமது விழிகள் வியப்பால் தெறித்து விழுந்து விடும். நாம் எல்லோரும் நமக்கு ஒரு உடம்பு இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் சித்தர்கள் நமக்கு இரண்டு உடம்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஒன்று கண்களால் பார்க்க கூடிய இந்த ஸ்தூல உடம்பு, மற்றொன்று கண்ணுக்கு தெரியாத சூட்சம உடம்பு. இதில் எது தேவை? எது தேவையில்லை? என்பதெல்லாம் கிடையாது. இரண்டுமே தேவை, இரண்டுமே முக்கியமானது. ஆனால் ஸ்தூல உடம்பை காப்பாற்றினால் தான் சூட்சம உடம்பை காக்க முடியும் என்று நினைத்த நமது சித்தர்கள், கண்ணுக்கு தெரியும் உடம்பை கட்டி காப்பதற்காகவே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். உடம்பு இயங்குவதற்கு ஆகாரம், தண்ணீர், சீதோஷ்ண நிலையை தாங்கிக்கொள்ளும் ஆடை அல்லது இருப்பிடம் இவைகளை விட நல்ல மூச்சுக்காற்று அவசியமென்று கருதினார்கள்.
நமது மூச்சுப்பை என்ற நுரையீரலின் இயல்புகளையும், அது காற்றை வெளியிலிருந்து வாங்கி உடம்பிற்குள் ஒவ்வொரு உறுப்பிற்கும் தேவையானதை பகிர்ந்து கொடுக்கும் இயக்கத்தையும், சித்தர்கள் அறிவியல் பூர்வமாக அறிந்திருந்தார்கள். இதுமட்டும் அல்ல எந்தெந்த நாட்களில், எந்தெந்த நேரத்தில் சுவாசத்தின் இயக்கம் எப்படி இருக்கும் என்றும் பட்டியல் போட்டுத்தருகிறார்கள். நமது மனித உடம்பு ஒரு நாழிகை நேரத்தில் முன்னூற்றி ஐம்பது தடவை சுவாசிக்கிறது என்றும், ஒரு முழு நாளில் அதாவது அறுபது நாழிகை நேரத்தில் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு முறை சுவாசம் நடத்துகிறது என்றும், கணக்கு போட்டு கூறுகிறார்கள். காலை நேரம் சுவாசம் எப்படி ஓடும், மாலைநேரம் அதன் வேகம் எப்படி இருக்கும், மதியமும், இரவும் அதன் நடையில் என்ன மாற்றம் வரும் என்பவைகளை எல்லாம் மிக அழகாக சுட்டி இருக்கிறார்கள்.
நாளங்கள் வழியாக இரத்தம் ஓடி உடம்பை செயல்பட வைக்கிறது என்று நமக்கு தெரியும். ஆனால் நம் உடம்பிற்குள் உள்ள இரத்த நாளங்கள், நரம்புகள், எலும்புகள், தசை நார்கள் இவைகள் அனைத்தையும் செயல்பட வைப்பது தசநாடிகள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருஷன், காந்தாரி, அக்கினி, அலம்புவி, சங்கினி, குழுவி என்பது அந்த நாடிகளின் பெயர்கள். இந்த பத்து நாடிகளும் மனித உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களையும், மனதையும், உயிரையும் இயக்குகிறது என்பது சித்தர்களின் முடிவாகும். இந்த நரம்புகளை, சரியான விதத்தில் சுருதி சேர்த்தால் மனித உடம்பு ஒரு வீணையை போல ஈஸ்வரனையே மயக்கும் நாதத்தை எழுப்பும் என்பது சித்தர்களின் விதி.
எனவே இறைவனை எழுப்பி நம்மோடு அழைத்துக்கொண்டு உறவாடி அவனோடு இரண்டற கலந்துவிடுவதற்கு முதல் தேவையானது ஸ்தூல உடம்பு. அந்த ஸ்தூல உடம்பை மூப்பு, பிணி, சாக்காடு என்ற மூன்று வகை தோஷங்களும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு பல வழிகளை சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். இதுவரையிலும் சித்தர்களை பற்றி பேசியவர்களும், எழுதியவர்களும் சித்தர்களின் தத்துவம், கோட்பாடுகள், ஆன்மநேய வெளிப்பாடுகள் போன்றவற்றையே அதிகம் தொட்டுக்காட்டி இருக்கிறார்கள். அதற்காக நாம் அந்த வழியில் வருவதற்கு முன்பாக நமது நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த வண்ணம் உடம்பு பாதுகாத்தல் என்ற விஷயத்தை பற்றி சித்தர்கள் கூறி இருக்கும் பல ரகசியங்களை அறிந்து கொள்வோம். அதன் பிறகு சூட்சம உடலை பாதுகாக்க, ஆன்ம வளர்ச்சியை எப்படி செய்யவேண்டும் என்று சித்தர்கள் கூறுகின்றவற்றை பார்க்கலாம். இனி மனித உடம்பை எப்படி பாதுகாப்பது என்று சிறிது ஆராய்வோம்.