சித்தர் ரகசியம் - 3
அப்பாவி ஒருவன் அகப்பட்டுகொண்டான் என்றால், ஊரிலுள்ள வம்புவழக்குகளை எல்லாம் அவன் தலையில் கட்டி மொத்தமாக அவன் கதையை தீர்த்துவிடுவது என்பது விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே நமது நாட்டிலுள்ள காவல் நிலையங்களின் வழக்கம். ஒரு சிறிய தவறு செய்துவிட்டு போலீஸ்காரரிடம் அகப்பட்டுவிட்டால் போதும். அப்படி நிற்காதே, இப்படி நிற்காதே, அதை செய்யாதே, இதை செய்யாதே என்று ஆயிரம் கட்டளைகளை போடுவார். சின்னச்சின்ன காரியங்களை கூட, பெரிய தவறுகளுக்கான முகவுரை என்று கற்பனை செய்து பயமுறுத்துவார். இது தனிப்பட்ட காவல்துறை சார்ந்த விஷயம் அல்ல ஒட்டுமொத்த சமுதாயமே இப்படித்தான் இருக்கிறது.
ஒரு தவறு நடந்துவிட்டால் அந்த தவறு ஏன் நடந்தது? யார் நடத்தினார்கள் என்பதை பற்றி சிந்திப்பதற்கு முன்னால் இவர்களாக சிலபேரை நினைத்து வைத்திருப்பார்கள் அவர்கள்தான் அந்த தவறுக்கே மூலக்காரணம் என்றவகையில் பேசுவார்கள் எனக்கு தெரிந்த ஒருவர் நல்ல சமையல்காரர் கல்யாணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு சுவைபட சமைப்பார். இவரிடம் உள்ள கெட்டப்பழக்கம் என்னவென்றால் யாராவது கட்டளைபோட்டால் செய்வாரே தவிர தானாக எதையும் முன்யோசனையாக எதையும் செய்யமாட்டார். ஒருமுறை ஏதோ ஒரு தவறு இவர் மூலம் நடந்துவிட்டது என்பதனால் வேலையை விட்டு இவரை அனுப்பி விட்டார்கள். அன்றுமுதல் மனுஷனின் போக்கே மாறிவிட்டது.
யார் எதை செய்தாலும் அதற்கெல்லாம் மூலக்காரணம் எதாவது ஒரு சமையல்காரனாகத்தான் இருக்கவேண்டும் என்பார். இந்திராகாந்தி அம்மையார் கொலை செய்யபட்டதற்கே சமையல்காரரே காரணம் என்று பிடிவாதமாக வாதாடுவார் என்றால் அவரது குணாதிசயத்திற்கு இதைவிட பெரிய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அவர் இப்படி பிடிவாதமாக கூறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் தினசரி ஒழுங்காக வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தவரை இனி வராதே போ என்று தடுத்தது ஒரு சமையல்காரன். சிறிய வருமானமாக இருந்தாலும் நிரந்தர வருமானமாக இருந்ததனால் போதும் என்ற திருப்தியோடு வாழ்ந்து வந்தார். அந்த வருமானத்திற்கும் தீங்கு ஏற்பட்டது அதை ஏற்படுத்தியது இவரை பொறுத்தவரை ஒரு சமையல்காரன். எனவே இவருடைய துக்கங்கள் அணைத்திற்கும் ஒரு சமையல்காரன் எப்படி பொறுப்பாக இருக்கிறானோ அதே போலவே உலகத்தின் துக்கம் அனைத்துக்கும் சமையல்காரன் மட்டுமே பொறுப்பாக இருக்க வேண்டும் என்பது இவரது நம்பிக்கை.
காலம் கெட்டுவிட்டது, கலிமுத்திவிட்டது, சிறுசு-பெருசு என்ற மரியாதை போய்விட்டது. பெயர் சொல்லவே அச்சப்பட்ட கணவனை வாடா போடா என்று அழைக்கும் அளவிற்கு சமூகம் முற்றி போய்விட்டது. இவை எல்லாவற்றிற்கும் யார் காரணம்? ஒரு சிலரை கேட்டால் அரசியல் தலைவர்கள் காரணம் என்று சொல்வார்கள். வேறு சிலரை கேட்டால் சினிமா மோகம் அவர்களை படாதபாடு படுத்துகிறது என்பார்கள். மற்றும் சிலரோ மேல்நாட்டு மோகம் அலைக்கழிக்கிறது என்பார்கள். இப்படி மூவகை வாதத்தோடு நான்காவதாக ஒரு காரணத்தையும் கூறுவார்கள். இந்த நாட்டில் உள்ள பெண்கள் கெட்டுவிட்டார்கள் ஒழுக்கத்தன்மையிலிருந்து மாறிவிட்டார்கள் தங்களது பொறுப்புகளை மறந்துவிட்டார்கள் என்று இப்படி கூறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. பெண்கள் தான் சமுதாயகேடுகள் அனைத்திற்கும் மூலக்காரணம் என்று சொல்பவர்கள் முக்கால்பங்குக்கு மேல்.
இப்போது நாட்டின் பல பாகங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மிக அதிகமாக நடக்கத்துவங்கி விட்டது. சாலை ஓரத்தில் பல பெண்கள் அவமானப்படுத்த படுகிறார்கள், பலாத்காரப்படுத்தபடுகிறார்கள். ஒரு கூட்டமே சேர்ந்து பட்ட பகலில் ஒரு பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்கிறது. இதை கண்டிக்க தடுத்து நிறுத்த தகுதி இல்லாத அறிவு சார்ந்த பெரியவர்கள் பலர் இத்தகைய ஈனச்செயலுக்கு பெண்களே காரணம் என்கிறார்கள். பெண்களின் பழக்க வழக்கம் சரியில்லையாம். அவர்கள் அணிகிற ஆடை ஆபாசமாக இருக்கிறதாம். அதை பார்த்து ஆண்மக்கள் அனைவருமே வெறுப்பேறி நடக்கிறார்களாம். எனவே பெண்கள் ஆடைகளால் உடம்பை முழுவதும் மறைத்து கொண்டு பொது இடத்திற்கு வரவேண்டும் என இந்த அறிவு ஜீவிகள் புதுமெட்டு பாடுகிறார்கள். உடல் முழுவதும் ஆடையால் பெண்கள் மறைத்து கொண்டு வரவேண்டும் என்றால் இந்த நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? தாலிபான் ஆட்சியா? என்று கேட்க தோன்றுகிறது.
ஒரு பெண்ணினுடைய ஆடை, அலங்காரம் ஆணின் மனதை கெடுக்கிறது என்பதை நான் ஒத்துகொள்கிறேன். அதற்காக பெண் என்ன செய்ய முடியும்? எட்டுமுழ புடவை கட்டி ஆச்சாரமான மடிசார் தோற்றத்தோடு வெளியில் நடமாட வேண்டுமா? ஒரு வாதத்திற்காக கேட்கிறேன் அப்படி நடமாடிய காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்களா? கற்பழிப்பும்,பலத்தாகரமும்,வன்புணர்ச்சியும் அப்போது இல்லையா? ஆடைதான், ஆசையை தூண்டுகிறது என்றால் அறுபது வயது மூதாட்டியை ஆறுவயது குழந்தையை கற்பழிக்க துணிகிறானே ஒரு கயவன் அவன் ஆடையை பார்த்தானா? அல்லது ஆட்களை பார்த்தானா?
பெண்களை போகப்பொருளாக ஆண்கள் பார்ப்பது பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களில் இல்லை. அவர்களது நடை, உடை பாவனையில் இல்லை காலம்காலமாக இந்த நாட்டில் பெண்ணை பற்றிய சிந்தனை என்பதே பெண் என்பவள் காம சுகம் தருபவள், பெண் என்பவள் வாரிசுகளை பெற்றுத்தருபவள், பெண் என்பவள் சம்பளம் வாங்காமலே வீட்டு வேலை செய்பவள் ஆக மொத்தத்தில் பெண் என்ற இனம் தனக்காக படைக்கப்பட்டது அல்ல, ஆண்களுக்காக படைக்கப்பட்டது அது அவர்களின் சொத்து என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இதன் பெயர் தான் ஆணாதிக்கம். அனைத்து தவறுகளையும் தானே முன்னின்று செய்துவிட்டு தவறுக்கெல்லாம் பெண்ணே பொறுப்பு என்று பித்தலாட்ட நாடகமாடி அதை பல பெண்களையும் நம்பவைத்திருப்பது ஆண்களின் மாய்மாலம்.
ஆண்களுக்கு இந்த அடிமைப்படுத்தும் புத்தியை வளர்த்து விட்டது யார்? திட்டமிட்டு தீட்டிய கத்தி போல அறிவை பெண்ணடிமைத்தனத்திற்கும் கற்பித்து விட்டது யார்? இமயமலை அடிவாரத்தில் அந்த பணியை வேதகால ரிஷிகள் செய்தார்கள் பொதிகைமலை அடிவாரத்தில் பெண்ணை அடிமையாக்கி காலுக்குள் போட்டு நசுக்கும் வித்தையை சித்தர்கள் கற்றுக்கொடுத்தார்கள். சித்தர்கள் பேசுவது அனைத்தும் சீர்திருத்தம் சமுதாய மாற்றம், ஆன்மீக முன்னேற்றம் என்பது தானே அவர்கள் மனிதகுலத்தின் சரிபாதி இனத்தை அடிமைப்படுத்த திட்டமிடுவார்களா? என்று பலருக்கு தோன்றலாம். சித்தர்கள் சீர்திருத்தம், சமூகநீதி, ஆன்ம முன்னேற்றம் என்பவைகளை பேசினார்கள் என்பது உண்மை. ஆனால் வாழைப்பழத்திற்குள் குண்டூசியை வைப்பது போல மேலே சொன்ன அனைத்து விஷயங்களின் முதுகெலும்பாக பெண்ணடிமைத்தனத்தை புகுத்தி ஒரு மூளைச்சலவை செய்து மனித குலத்தையே முற்றிலும் பெண்ணிற்கு விரோதமாக மாற்றி விட்டார்கள்.
சிக்குநாறும் கூந்தலையே செழுமை மேகமாய்
செப்புவார்கள் கொங்கைதனை செப்புக் கொப்பதாய்
நெக்கு நெக்கு உருகி பெண்ணை நெஞ்சில் நினைப்பார்.
நிமலனை நினையார் என்று ஆடு பாம்பே
இது பாம்பாட்டி சித்தரின் பல பாடல்களின் ஒரு சிறு பகுதி. இயற்கையாக இறைவனின் படைப்பில் பெண்ணுக்கு அமைந்த உடல் உறுப்புகளை அறுவறுக்கத்தக்க வகையில் கேலி பேசுவதும், மனிதனின் உலக நாட்டத்திற்கு பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்று கூறுவதும் எவ்வளவு தெளிவாக தெரிகிறது பாருங்கள். பெண்களின் அங்கம் என்பது மரத்தின் கிளைகள் போல, கடலில் உப்பை போல இயற்கையாக அமைந்தது. இதில் பெண்ணின் குற்றம் என்ன இருக்கிறது? பெண்ணின் உறுப்புகளை பார்த்து விபரீத கற்பனைகளை ஒரு ஆண் வளர்த்துக்கொண்டால் அதற்கு பெண் எப்படி குற்றவாளி ஆவாள்? மனிதனை ஆசைப்பட வைப்பது பெண் என்றால், உலக மோகத்தில் மூழ்கடிப்பது பெண் என்றால், இறைவனை நெருங்காமல் தடுப்பது பெண் என்றால், பல பெண்களும் இதே சேற்றில் விழுந்து கிடப்பது ஏன்? ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்கள் அனைவருமே புத்தராகிவிடலாமே.
பாம்பாட்டி சித்தர் கூட ஒரு எல்லையோடு நிற்கிறார். ஈசனே நேரடியாக வந்து காதறுந்த ஊசியும் வாறது காண் கடைவழிக்கே என்று ஞான மொழி கூறி சித்தராக மாற்றினான் என்று ஊரும் உலகமும் போற்றி வணங்குகிறதே அந்த பட்டினத்தார் தன் வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்று நெஞ்சகத்து வஞ்சகத்தை நஞ்சுகொண்டு எரித்த பட்டினத்தார் பனிரெண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று கனகமுலை தந்த தாயின் பிண உடம்பு நோகும் என்று வாழைமர பட்டியால் சிதை மூட்டிய பட்டினத்தார் தன்னை வளர்த்த பெண்ணினத்தை தனக்கு ஞானம் தந்த பெண்ணினத்தை தனக்கு உயிர் மூச்சு கொடுத்த பெண்ணினத்தை என்ன சொல்லி அழைக்கிறார் என்று இதோ பார்ப்போம்
பெண்ணாகி வந்தொரு மாயபிசாசம் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து
புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போத பொருள்பறிக்க
எண்ணாதுணை மறந்தேன் இறைவா கசசி ஏகம்பனே
இது தான் பெண்ணுக்கு பட்டினத்தார் கொடுத்த அழகான பட்டம். மாயப்பிசாசு இது பட்டினத்தார் மட்டுமே கொண்ட கருத்தல்ல. பதினெட்டு சித்தர்கள் என்று சொல்கிறார்களே அவர்களும் நவநாத சித்தர்கள் என்று சில வடநாட்டு சித்தர்களை கூறுகிறார்களே அவர்களும் கூட பெண்ணுக்கு தந்த பட்டம் இது தான் இறைவனை வழிபட, இறைவனை தியான செய்ய, இறைவனோடு தவம் செய்து இரண்டற கலக்க பெண் தடையாக இருக்கிறாள் என்றால் இதேகாரியத்தை பெண் செய்வதற்கு ஆண்கள் தடையாக இல்லையா? சித்தர்கள் வரிசையில் ஒரு பெண் கூட வரவிடாமல் இவர்களது ஆணாதிக்கம் தடை செய்தது என்று சொல்வதற்கும் வழி இருக்கிறதே என்று சித்தர்களின் பெண் சம்மந்தமான கருத்துக்களை விமர்சனம் செய்பவர்கள் கேட்கிறார்கள்.
இவர்களது கேள்வியில் முற்றிலும் நியாயம் இருப்பது போல் நமக்கு தோன்றும் ஆனால் உண்மை நிலையை ஆராய்ந்தால் இவ்வளவு ஆவேசமாக சித்தர்களின்மேல் ஆத்திரம் அடையவேண்டிய அவசியமில்லை என்பது தெரியவரும். சித்தர்கள் பெண்களை மாயப்பிசாசுகள் மோகினிகள் என்று வர்ணனை செய்திருக்கிறார்கள் அதை யாரும் மறுக்க முடியாது. சித்தர்கள் இலக்கியத்தை அறிந்த எவரும் சித்தர்கள் பெண்ணினத்தையே விரோதிகளாக கருதினார்கள் என்று கடுகளவு கூட கருதமாட்டார்கள். காரணம் எந்த இடத்திலெல்லாம் பெண்களை பற்றிய பெண்களின் அவயங்களை பற்றிய கடுமையான மொழிகளை சித்தர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களோ அங்கெல்லாம் அது காமம், மோகம், உடல்வெறி பேராசை போன்றவைகளையே குறிக்கும். இதை உணர்ந்தால் சித்தர் பாடல்கள் பெண்களுக்கு ஈட்டி அல்ல அது அவர்களையும் தாலாட்டும் தென்றல் என்பது தெரியவரும்.