சித்தர் ரகசியம் - 2
சிறந்த வாழ்க்கை என்பது எது? தானே சம்பாதித்து தானே சமைத்து தானே உண்டு வாழ்வதா, சிறந்த வாழ்க்கை? அப்படி வாழுகிற வாழ்க்கை மிருகத்தின் வாழ்வை விட கீழ்த்தரமானது என்று யோசிக்காமலே பதில் சொல்லலாம். சிறிய வெல்லத்துண்டாக இருந்தாலும் கூட நாலுபேருக்கு கொடுத்த பிறகே உண்ண வேண்டுமென்று கற்பிற்கப்பட்டவர்கள் நாம். சுயநலத்தோடு வாழ்வது மனித இயல்பு என்றாலும் சுயநலத்தை மறந்து வாழ்வதே சாலச்சிறந்தது என்பது நமக்கு கற்பிக்கப்பட்ட பாடம்.
இந்த நாட்டில் ஆயிரம் ஞானிகள் உண்டு, ஆயிரம் ரிஷிகள் உண்டு. அவர்கள் அனைவரையும் விடவும் ஸ்ரீ ராமானுஜர் மிகச்சிறந்தவர் என்று போற்றப்படுவது ஏன்? ஆதிசங்கரரிடம் இமயத்தை எட்டும் அளவிற்கு அறிவு உண்டு. ஸ்ரீ மத்வருக்கு கடலை விட ஆழமான நம்பிக்கை உண்டு. ஆனால் ராமானுஜர் ஒருவருக்கு தான் அறிவு நம்பிக்கை இவைகளோடு விவரிக்கவே முடியாத குளிர்ச்சியான இதயம் உண்டு. தான் ஒருவன் குருவின் கட்டளையை மீறி நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை உலகத்து உயிர்கள் அனைத்தும் வைகுண்ட வாசனின் வாசல்படியை தொடுகின்ற தகுதியை பெற வேண்டும் என்பதற்காக கோபுரத்து மேல் ஏறிநின்று கோவிந்தனின் எட்டெழுத்து மந்திரத்தின் ரகசியத்தை ஊர் உலகமெல்லாம் அறிந்து கொள்ள உரக்க சொன்னாரே அந்த கருணை தான் அவரை அருளாளர் பரம்பரையில் தலைமை இடத்தில் இன்னும் வைத்திருக்கிறது.
ராமானுஜரை போல பல ஞானிகள் உண்டு. ஆனால் அவர்கள் அனைவருமே ராமானுஜருக்கு பின்னால் வந்தவர்கள் அவரை பார்த்து வளர்ந்தவர்கள் ராமானுஜருக்கு முன்பு அவரை போல யாரும் கருணையாக இல்லை. அதனால் மட்டும் தான் அவர் தனியிடத்தை பெறுகிறார். சித்தர்கள் மருத்துவத்தை கண்டுபிடித்தார்கள். மாந்தீரிகத்தை அறிந்து கொண்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தை விளக்கி சொன்னார்கள் என்பதற்காக அவர்களை பரோபகாரிகளாக ஈரத்தின் விளை நிலங்களாக சொல்ல முடியாது. தன் முக்தி, தன் சுகம், தனது அமைதி என்று வாழ்ந்த, வாழ பிரியப்பட்ட சுயநலக்காரர்கள் சித்தர்கள்.
இவர்கள் காடுகளில் பல்வேறுபட்ட மூலிகைகளை தேடி புதுவிதமான மருந்துகளை உருவாக்கியது ஏன்? நாட்டில் உள்ள மக்கள் மூப்பு பிணி சாக்காட்டால் அவதிப்படுகிறார்கள். அவர்களை நோயிலிருந்து விடுவிக்க வேண்டும். வயோதிகத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் மரணத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். என்பதற்காகவா மருந்துகளை தயாரித்தார்கள்? இல்லை நிச்சயமாக இல்லை இவர்கள் கோவில் எழுப்ப வேண்டும் அதற்கு பணம் வேண்டும் பணத்தை பெறுவதற்கு குறுக்கு வழி தங்கத்தை உற்பத்தி செய்வது அப்படி தங்கம் செய்வதற்கு ரசவாத கலையில் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு மூலிகைகளை ஆராய்ந்தார்கள் அதில் எதேச்சையாக விபத்தாக சில மருந்துகள் கிடைத்தது அவ்வளவு தான்.
மருந்துகள் எப்படி ரசவாதத்திற்காக தேடும் போது கிடைத்ததோ அதே போலத்தான் மாந்த்ரீகமும், ஜோதிடமும். ரசவாதத்தை செய்ய நல்ல நாட்களை தேர்ந்தெடுக்கும் போது தானாக கிடைத்த புதையலாகும். எனவே இவர்கள் மக்களுக்காக என்று எதையும் தேடவில்லை அப்படி தேடியிருந்தால் ஒளிவு மறைவு இல்லாமல் பத்துபேர் பயன்படும் வண்ணம் தெளிவாக எதையும் கூறி இருப்பார்கள். தனது இரகசியம் வெளியாட்கள் புரிந்து கொள்ள கூடாது என்பதற்காகவே பரிபாஷையில் மருந்து ரகசியங்களை எழுதி வைத்தார்கள் எனவே சித்தர்கள் என்பவர்கள் சுயநலத்தின் கூடாரம், பேராசையின் ஆதாரம், மக்களை பற்றி கிஞ்சித்தும் நினைத்து பார்க்காத வேதாளம் என்று சிலர் கூறுகிறார்கள்.
சித்தர்கள் சுயநலக்காரர்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவர்கள் சித்தம் தெளிந்தவர்களா? பித்தம் தலைக்கேறாதவர்களா? மொத்தத்தில் நம்மை போன்ற சராசரியான மனநிலை படைத்தவர்களா? அல்லது மன நோயாளிகளா? என்று ஒரு சாரார் கேட்கிறார்கள். சித்தம் தெளிந்தவன், இறைவனின் தத்துவம் புரிந்தவன் சகல உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தால் அவன் எதற்காக சக மனிதர்களிடமிருந்து தன்னை வேறு படுத்திக்கொள்ள வேண்டும். உலகத்து மாந்தர்கள் ஆசை மயமாக கிடக்கிறார்கள் அவர்களோடு சேர்ந்தால் பால் திரிந்தது போல தங்களது மனமும் திரிந்து விடும். என்பதற்காக ஒளிந்து மறைந்து அகோரமான வேடமிட்டு வாழ்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டால் அவர்கள் மனம் பலவீனமானது களிமண்ணை போல நெகிழ்ந்து போகக்கூடியது உறுதி இல்லாதது என்ற அர்த்தம் வந்துவிடும்.
இறைவனை காண்பதற்கு கடின முயற்சி வேண்டும். துக்கங்கள், துயரங்கள் ஆயிரம் வந்தாலும் அத்தனையும் தாங்கி கொள்ளும் எகு போன்ற மன உறுதி வேண்டும். அத்தகைய மனம் இருந்தால் மட்டுமே ஆண்டவனை நேருக்கு நேராக தரிசனம் செய்ய முடியும். சித்தர்கள் இறைதரிசனம் பெற்றவர்கள் என்றால் அவர்கள் மனது எப்படி உறுதியற்றதாக இருக்கும்? எப்படி மற்றவர்களை பார்த்தவுடன் நெறி பிரண்டு போய்விடும். எனவே ஒன்று அவர்கள் இறைதரிசனம் பெறாமல் பெற்றதாக கூறிகொள்ளும் கபடவேடதாரிகளாக இருக்க வேண்டும். அல்லது கானத்தை கண்டது போல் நம்பும் மன நோயாளியாக இருக்க வேண்டும். சாக்கடையில் வாழ்வதும் மயானத்தில் பிணங்களின் மேல் உறங்குவதும், மலைகளில், குகைகளில் தனித்திருப்பதும் இறை அருளாளர்களின் லட்சணமாக தெரியவில்லை. எனவே சித்தர்கள் என்பவர்கள் பித்துக்குளிகள் பைத்தியக்காரர்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.
உடுப்பதற்கு ஒரு கோமணம், உண்பதற்கு ஒருபடி சோறு, உறங்குவதற்கு ஊரார் திண்ணை. வேர்த்தால் குளிப்பதற்கு ஆற்று தண்ணீர். இதுவே சித்தர்களின் லட்சணம் என்று பட்டினத்தார் ஒரு இலக்கண வரைமுறையை தருகிறார். இப்படி வாழ்ந்தால் தான் சித்தர்கள் என்றால் அரசனாக இருந்தாலும், அறிஞனாக இருந்தாலும் கர்ம யோகிகளாக வாழ்ந்த ஜனகனையும், பீஷ்மனையும் எந்த பட்டியலில் சேர்ப்பது? பட்டினத்தாரின் கூற்றுப்படி சித்தர் மட்டுமல்ல சித்தரை போல் வேடமிட்ட வேறு பலரும் இருக்கலாமே இவர் தான் சித்தர் என்று நினைத்து மக்களும் ஏமாறுவார்களே. எனவே சித்தர் இலக்கணத்தில் சித்தர்கள் என்று யாருமே இல்லை இருப்பவர்கள் அனைவருமே பித்தர்களும் எத்தர்களுமே என்று பலர் கருதுகிறார்கள்.
சித்தர்களுக்கு பைத்தியக்காரர் பட்டம் தருபவர்கள் மட்டுமல்ல, சித்தர்கள் அனைவருமே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். கடவுளை நம்பாதவர்கள், கடவுளை நம்புகிறவர்களை தடுத்து நிறுத்தி சீர்திருத்தம் செய்ய வந்தவர்கள். அவர்கள் நாத்திகர்கள் என்ற பட்டத்தையும் இன்றைய காலகட்டத்தில் பலரும் கொடுக்கிறார்கள். சித்தர்களை நாத்திகர்கள் என்று சித்தரிக்கும் பலர் நட்டகல்லை தெய்வம் என்று நாலுபுஷ்பம் சாற்றியே சுற்றி வந்து மொன மொன வென்று சொல்லும் மந்திரம் ஏதடா என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளை எடுத்து கொண்டு பேசுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பாடலின் முதல் நான்கு வரிகளை ஆதாரத்திற்காக பேசுவார்களே தவிர கடைசியில் உள்ள வரிகளை தப்பி தவறி கூட சொல்லிவிட மாட்டார்கள்.
நீ கடவுள் என்று வழிபடுகிறாயே அந்த உருவம் நீனே மலையிலிருந்து உடைத்தெடுத்து வந்த கல். நீதான் அந்த கல்லை செதுக்க உளி தீட்டினாய். தீட்டிய உளி வைத்து சிற்பமாக வடித்தது நீயே. நீ வடித்த சிற்பத்தையே கடவுள் என்று கருதி மலர்மாலை சூட்டி வணங்குகிறாயே? இதில் வேடிக்கையாக கடவுளை வரவைப்பதற்கும், கடவுளின் அருளை தரவைப்பதற்கும் மந்திரங்கள் வேறு ஒதுகிறாய்? நன்றாக யோசித்து பார். இந்த கல் பேசுமா? இதற்கு அந்த சக்தி இருக்கிறதா? நேற்றோ அதற்கு முந்தியோ கல் பேசியதாக கேள்விபட்டிருக்கிறாயே என்று அந்த பாடலின் பொருளை இதுவரை மட்டுமே கூறுவார்கள். இதற்கு மேலே வரும் நீ வடித்த கல் பேசுமா? நிச்சயம் பேசாது. காரணம் கடவுள் என்பவன் கல்லில் இல்லை உன் மனதில் இருக்கிறான். ஆழாமான உன் இதயத்தில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறான் பானையில் இருக்கின்ற சுவையான குழம்பை அகப்பை எத்தனை முறை தொட்டு தொட்டு எடுத்தாலும் அதற்கு அந்த சுவை தெரியாது அந்த சுவையை அதுவால் உணர முடியாது. அதே போலத்தான் இறைவனின் சுவையை கல் உணராது உன் மனது மட்டுமே உணரும் என்ற வகையில் நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிசுவை அறியுமோ என்று பாடல்வரும்.
பகுத்தறிவு பேசுகின்ற நமது உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் முழுமையாக எதையும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எப்போதுமே மேலோட்டமாக பார்த்து நுனிப்புல் மேய்ந்து பழக்கமே தவிர ஆழ்ந்த ரகசியங்களை தத்துவங்களை உணரக்கூடிய நுண்ணிய அறிவு நிச்சயம் அவர்களிடம் கிடையாது. எந்த சித்தரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இல்லை. கடவுள் நம்பிக்கையை தவறான வழியில் பயன்படுத்துவதை சித்தர்கள் சாடுவார்களே தவிர எப்போதுமே கடவுளே இல்லை என்று அவர்கள் கூறுவது கிடையாது. இன்றைய சுயமரியாதை கூட்டத்தால் நாத்திகம் என்ற சொல்லுக்கு வைத்திருக்கின்ற பொருளின் அடிப்படையில் சித்தர்களை ஒருபோதும் கணக்கிட முடியாது.
தற்கால சுயமரியாதை கூட்டம் பயன்படுத்தும் நாத்திகம் என்ற வார்த்தை கடவுள் நம்பிக்கை இல்லை என்பது தானே இதில் வேறு என்ன பொருள் இருக்க கூடும். என்று சிலருக்கு கேள்வி எழும்பும். உண்மையில் நாத்திகம் என்ற வார்த்தை கடவுள் இல்லை என்று பொருளை தராது. நமது இந்திய மரபில் மக்களின் சிந்தை ஓட்டத்தை இரண்டுவிதமாக பிரிக்கும் பழக்கம் உண்டு. ஒன்று நான்கு வேதத்தையும் உயிராக நம்பி அதன் வழியில் நடப்பது இன்னொன்று வேதங்களை ஏற்காமல் சுயவழியில் பாதை அமைத்து கொள்வது. வேதங்களை நம்புவபர்களுக்கு இந்திய பரிபாசையில் நாத்திகர்கள் என்று பெயர். வேதங்களை ஏற்காதவர்களை நாத்திகர்கள் என்று அழைப்பது வழக்கம். ஆஸ்திகம் என்றால் ஆஸ்தி, சொத்து, மூலதனம் என்பதிலிருந்து தொடங்கும். நாஸ்தி எதுவும் இல்லை. மூலதனம் மூலம் வழிகாட்டுதல் இல்லை என்பது பொருளாகும். ஆஸ்திகம், நாஸ்திகம் என்பதற்கு இதுதான் பொருளே தவிர கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நாஸ்திகர்கள் என்று அழைப்பது நமது வழக்கம் அல்ல. கடவுளே இல்லை என்று வாதாடுகிற சாங்கிய முனி கபிலரை கூட வேதங்கள் நாஸ்திகர் என்று ஒதுக்க வில்லை.
சில சித்தர்கள் வேத நெறியை வைதீக கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் மட்டுமே அவர்களை நாத்திகர்கள் என்று சொல்லலாமே தவிர கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் பட்டியலில் அவர்களை சேர்க்க கூடாது. இன்னும் ஒருசிலர் சித்தர்கள் வேதங்களை வெறுத்தார்கள், வைதீகத்தை எதிர்த்தார்கள், சனாதனத்தை பகைத்தார்கள் எனவே அவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல என்றும் சொல்கிறார்கள். இவர்கள் வேத விதிப்படி நில் என்ற கடுவளி சித்தர் போன்றோரின் கருத்துக்களை அறியாதவர்கள் என்பதாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். சித்தர்கள் சுயநலக்காரர்கள், சித்தர்கள் பைத்தியக்காரார்கள், சித்தர்கள் நாத்திகர்கள் என்று மாற்றார் கருத்து சொன்னால் அதை எதிர்க்கவும், மறுத்து பேசவும் சித்தர் இலக்கியங்களிலேயே நல்ல ஆதாரங்கள் உண்டு. ஆனால் அடுத்ததாக சித்தர்களின் கூறப்படுகின்ற குற்றசாட்டு மிகக்கடினமானது மறுத்து பேசுவதற்கும், அதிகம் வாய்ப்பு இல்லாதது.
சித்தர்கள் பெண்ணினத்தின் விரோதிகள். பெண்ணை அடங்காத பேராசைக்காரிகள் சமுதாயத்தை கெடுக்க வந்த கோடரி காம்புகள், மோகத்தை தூண்டி விடும் மோகினிகள், காமத்தை அடக்க தெரியாத காமினிகள் என்றெல்லாம் வசைபாடியவர்கள் என்று பலரும் கூறுகிறார்கள். பெண்களின் ஒய்யார கொண்டையில் தாழம்பு சிரிக்கும் அதன் உள்ளே ஈரும் பேணும் நாறும் இதை மெய்யாய் உணர்ந்து ஒதுங்கி போனவனே வெற்றி வீரன் என்ற ரீதியில் சித்தர் பாடல்களும் இல்லாமல் இல்லை. அடுத்த பதிவில் பெண்ணினத்தை பற்றி சித்தர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை சற்று விளக்கமாகவே பார்க்கலாம்...