Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளை கண்ட மனிதர் !


சித்தர் ரகசியம் - 1

   ழகிய வெண்ணிலவு, ஆர்ப்பரிக்கும் கடல், குபு குபுவென புகையை கக்கிக்கொண்டு மலையடிவாரத்தில் ஓடிவரும் ரெயில், இவைகளை எல்லாம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு வருவதில்லை. உறங்குகிற நாராயணனை துயில் எழுப்புகிற வெங்கடேச சுப்ரபாதம் காலை பொழுதை புத்துணர்ச்சியோடு வரவேற்கும். புல்லாங்குழலின் பூபாள ராகம், மலை உச்சியில் இருக்கும் கோவில் மணியோசை காதில் வந்து விழுவது தினசரி நடந்தாலும் அதை கேட்பதற்கு சலிப்பே ஏற்படுவது கிடையாது. இதே போலத்தான் சித்தர்களை பற்றி ஆயிரம் அறிந்திருந்தாலும் பலநூறு சங்கதிகளை ஆய்வு செய்திருந்தாலும் புதியதாக யாராவது ஒருவர் கூறத் துவங்கினால் நமக்குள் ஆர்வம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும். 

காரணம் சித்தர்களை பற்றி நமது மனதிற்குள் கட்டி வைத்திருக்கின்ற கற்பனை கோட்டை சித்தர்களை நாடினால் பெறமுடியாத பெரும் பேறுகளை எல்லாம் பெற்றுவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. இவை மட்டுமல்ல சித்தர்கள் ஆகாய வழியாக பறந்து செல்வார்கள். அலைகளே வீசாத நடுக்கடலில் நடந்து போவார்கள். சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளி காற்றை கைப்பிடிக்குள் அடக்கி விடுவார்கள், ஆக்ரோஷமாக ஆகாயத்திற்கும் பூமிக்கும் எழுந்து நின்று ஆர்ப்பாட்டமாக பற்றி எரியும் நெருப்பை கூட வாயினால் ஊதி அனைத்து விடுவார்கள், என்று எத்தனையோ எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது வைத்திருக்கிறோம். 

நேற்றுவரை எப்படியோ எனக்கு தெரியாது பறந்து செல்லுகிற சித்தர் ஒருவரின் படத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய பிறகு தமிழ்நாட்டில் சாதாரண ஜனங்களுக்கு கூட சித்தர்களின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பாமரர்களும் நம்புகிறார்கள். படித்தவர்களும் தேடுகிறார்கள் என்ற நிலை வந்தவுடன் வர்த்தகமும் கூடவே வந்துவிடும் என்பது போல நான் தான் சித்தர், நானே தான் சித்தர் என்று விளம்பர பலகையை நெஞ்சில் தொங்க விட்டுக்கொண்டு தமிழ் நாட்டின் தெரு முனைகளில் கூட கூட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் தான் சித்தர்களை பற்றி அவர்களது சித்தாந்தங்களை பற்றி அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் அறிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வேர்விட ஆரம்பித்தது அதனால் தான் பலநூறு பேர்கள் சித்தர்களை பற்றிய விளக்கங்களை கொடுத்து கொண்டிருந்தாலும் எனது பார்வையில் எனது அனுபவத்தில் கண்ட சித்தர்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். 

சித்தர்களின் மார்க்கங்களை அறிந்து கொள்வதற்கு முன்பு சித்தர்கள் என்றால் யார்? என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒன்றிரெண்டு கவிதை எழுதி அதை முட்டு சந்திலும் குட்டி சுவர் ஓரத்திலும் பாடி பரவசப்பட்டு சில தேனீருக்கு விலை போகும் தேவாங்குகளிடம் பாராட்டும் கைதட்டலும் பெற்று நானே மிக சிறந்த கவியரசன் ஆணை அம்பாரியில் பவனி வரவேண்டியது எனது கவிதைகளே என்று மார்தட்டுபவர்கள் மத்தியில் பலநூறு கவிதை எழுதி பல காவியங்களை படைத்து ஆன்றோரும் சான்றோரும் அறிவு சார்ந்த பெரியோரும் ஆகா இதுவல்லவோ கவிதை என்று பாராட்டினாலும் கூட தன்னை கவிஞன் என்று பறை சாற்றுவதில் நாணம் மிக்க நல்லவர்களும் இருக்கிறார்கள். 

சித்தர்கள் கதையும் இப்படித்தான் கல்லூரி புத்தகத்தை ஒன்றிரெண்டு முறை புரட்டி விட்டு நான் மருத்துவனாகி விட்டேன் என்று அறுவைசிகிச்சை செய்ய போகும் பித்துக்குளி மருத்துவனை போல் பலர் அலைகிறார்கள் தன்னை சித்தர்கள் என்று பறை சாற்றி கொண்டு ஆனால் உண்மை சித்தர்கள் அரங்கத்திற்கு வருவது இல்லை ஆர்ப்பாட்ட கூட்டத்தாரோடு கலந்து கொள்வதில்லை அதனால் அவர்களை இன்னாரென்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் போலிகளையும் பொய் புரட்டுகளையும் உண்மை என்று நம்பி ஏமாந்து போகும் சோணகிரிகள் மலிந்துவிட்ட நிலையில் பொய்க்கும் மெய்க்கும் உள்ள வித்தியாசத்தை உறுதிப்படுத்தி காட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு. சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்தால் தான் போலிகளை அடையாளம் காணலாம். 

சித்தர்களை பற்றி இதுவரை நிலவி வருகின்ற கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் பார்க்கும் போது சித்தர்கள் என்று அறியபடுபவர்களின் செயல்முறைகளை நடவடிக்கைகளை ஆராய்கிற போதும் சித்தர் யார்? என்ற கேள்விக்கு விடை காணுவது மிகவும் கடினம். சித்தர் என்ற சொல்லுக்கு பொது வரையறை தேடி இதுதான் அதன் இலக்கணம் என்று அறுதியிட்டு கூறுவதும் அதைவிட கடினம் என்பதும் தெளிவான உண்மையாகும். ஒரு பொருளை பற்றிய சந்தேகம் உருவாகும் போது அதன் முடிச்சுகளை விடுவித்து உண்மையை உள்ளபடி காட்டுவதற்கு அந்த பொருள் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல பதிலை அடையலாம் ஆனால் இங்கு சந்தேகத்தை உற்பத்தி செய்கின்ற பொருளே இது தான் அந்த பொருளா? என்ற அடிப்படை சந்தேகத்தையே கிளப்பி விடுகிறது என்றால் விடை காணுவது எங்கனம். 

சித்தர்கள் என்றால் மனைவி மக்கள், சொந்தம்-பந்தம் தொழில் சமுதாய அந்தஸ்து அத்தனையையும் துறந்தவர்கள் அவைகளை உடம்பில் ஒட்டி கொண்டிருக்கும் தூசுகளை போல் தள்ளி விட்டவர்கள் என்று ஒருசாராரும் இப்படி கூறுவது கூட சரிவராது. சாதம் வடித்து குழம்பு சேர்த்து கூட்டு பொறியலோடு உண்ணுவது உலகத்தாரின் நடைமுறை என்றால் சித்தர்களோ சாக்கடையில் கிடப்பதையும் தேவாமிர்தமாக உண்பவர்கள். உலக நடப்பிற்கு மாறானவர்கள், மாறுபட்டவர்கள் என்று வேறொரு சாரார் கூறுகிறார்கள் இவர்கள் இருவரும் கூறுவதுமே தவறு சாதாரண மனிதனது செயல்களை செய்யாமல் அசாதாரணமான சித்து விளையாட்டுகளை செய்பவர்களே அவர்கள் என்று இன்னொரு சாரார் கூறுகிறார்கள். 

சாக்கடையில் கிடப்பதும் ஆகாயத்தில் பறப்பதும் ஒரு மனிதனை உயர்ந்தவனாக பிறப்பற்ற உத்தமனானாக உருவாக்கி விடுமா? வித்தைகள் செய்வதும் வித்தைகள் கற்பதும் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் வந்து பிறக்கின்ற தண்டனையே கொடுக்கும் எனவே சித்தர்கள் அதை செய்ய மாட்டார்கள் சித்தத்தை அதாவது தனது மனதை முழுமையாக சிவனிடம் வைத்தவர்கள் என்று விளக்கம் தருகிறார்கள் சில பக்தர்கள். சித்தத்தை சிவன்பால் வைப்பவர்கள் அல்ல சித்தர்கள் காரணம் சிவம் என்பதே ஒரு மாயத்தோற்றம் இந்த உலகத்தை பிடித்து கொள்ள இருக்கும் கடைசிக் கயிறு அந்த சிவனை நினைப்பதை விட எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே சித்தர்களின் வேலை எனவே சித்தத்தை அடக்கியவர்கள் சித்தர்கள் என்று சில ஜீவன் முக்தர்கள் கருதுகிறார்கள். 

புராணங்களிலும், இதிகாசங்களிலும் கரைகண்ட வைதீக ஞானிகள் சிலர் சித்து என்ற வார்த்தை மூன்று என்ற பொருளை தரும் சிவபெருமான் முக்கண்ணன் என்பது எல்லோருக்கும் தெரியும் எனவே சிவனின் அம்சமாக இருப்பவன் சித்தன் அவனது செயல் சித்து என்கிறார்கள். சித்தர்கள் சிவனுக்கு மட்டுமா சொந்தக்காரர்கள்? பார்போற்றும் வைஷ்ணவத்திற்கும் சித்தர்களுக்கும் தொடர்பில்லையா? என்று சிலர் கேட்டதனால் அதற்கும் பதில் தருகிறார்கள். பெரியவர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரம பெருமான் இந்த அவதாரம் எடுப்பதற்கு முன்பு மூன்றடி உயரம் கொண்ட வாமனனாக வந்தான் அவன் மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டான் எனவே மூன்று என்பது பெருமாளையே குறிக்கும் எனவே சித்தர்கள் என்பவர்கள் திருமாலின் அடியார்களே என்றும் கூறுகிறார்கள். 

நாமோ நாலும் கற்ற பண்டிதரும் அல்ல. முற்றும் துறந்த முனிவர்களும் அல்ல. பசி வந்தால் உண்டு உடல் சோர்ந்தால் உறங்கி எழும்பும் சாதாரண ஜீவன்கள் அன்றாடம் வயிற்றுக்கும் வாய்க்கும் போராட்டம் நடத்தும் அற்ப மனிதர்கள் நமக்கு இந்த தத்துவ விளக்கங்கள் எதுவும் புரிவது இல்லை புரியவேண்டிய அவசியமும் இல்லை சித்தர் என்றால் யாரென்று மிக எளிமையான ஒரு முடிவிற்கு நாம் வந்து விடலாம். மனிதர்களாக இருந்தாலும் தெய்வங்களால் மட்டுமே செய்ய கூடிய செயல்களை செய்பவர்கள் சித்தர்கள் என்று முடிவு செய்து கொள்ளலாம். இன்னொரு முடிவிற்கு கூட வரலாம். கடவுளை காண்பதற்காக ஏங்கி கொண்டிருப்பவன் பக்தன் கடவுளை பார்த்து சாந்தி பெற்றவன் சித்தன். 

இப்படி இறை தரிசனத்தை பெற்று விட்டவன் பெற்று அனுபவித்தவன் சித்தன் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனாலும் சித்தர்களை பற்றி பல புகார்களும் இருக்கிறது சித்தர்கள் சுயநலக்காரர்கள் மனம் பிரண்டு போன மனநோயாளிகள் கடவுளை நம்பாத நாத்திகர்கள் சமுதாய ஒழுங்கையே சீர்குலைக்கும் கபட வேடதாரிகள் என்று பலரும் சித்தர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வைக்கிறார்கள் அவற்றில் மிக முக்கியமானது சித்தர்கள் பெண்களை வெறுத்தார்கள் பெண்களை போக பொருளாக மட்டுமே பார்த்தார்கள் பாம்பை பார்த்தால் எப்படி சாதாரண மனிதனுக்கு கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருமோ அதே போலவே சித்தர்களுக்கும்  பெண்களை பார்த்தால் கொலைகாரிகளாகவும் அறுவறுப்பான பதார்த்தம் என்று பார்த்து ஒதுக்கி அவர்களை இழிவுப்படுத்தினார்கள் என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை சித்தர்கள் மீது வைக்கிறார்கள் உண்மையில் சித்தர்கள் அப்படிப்பட்டவர்களா? அதை அடுத்த பதிவில் பார்ப்போம்







Contact Form

Name

Email *

Message *