யார் ஞானி 9
காந்தியை பற்றிய தனது சந்தேகங்களை இலங்கை அன்பர் தொடர்ந்து கேட்டார். குருஜியும் அதற்கு நிதானமாக பதில் சொன்னார். அவர்களது உரையாடல் இதோ உங்கள் முன்னால். சென்ற பதிவின் தொடர்ச்சியாக தருகிறோம்.
- இலங்கை அன்பர்:-
நீங்களே சொல்கிறீர்கள் இனம், மதம் என்பதெல்லாம் சமையலறை சங்கதி தனிப்பட்ட விஷயம் என்ற பிறகு எதற்கு ஏன் காந்தி பன்னெடுங்காலமாக ஹிந்து கடவுளாக கருதப்படுகிற ராமன் பெயரை தான் உருவாக்கிய அரசியல் சித்தாந்தத்திற்கு வைக்க வேண்டும். அது மட்டுமே எனக்கு புரியவில்லை நான் விளங்கி கொள்ளும் வண்ணம் தாங்கள் கூற இயலுமா?
- குருஜி:-
காந்தியின் வாழ்க்கை ஒரு பெரிய அரசமரம் என்றால் அதனுடைய வேர் மதம் மற்றும் தர்மத்திலிருந்தே வளர்ந்து வந்ததாகும். ஆனாலும் காந்தியை இந்த உலகம் ஒரு மத போதகராக தர்மத்தை உபதேசிக்கிற தத்துவ அறிஞராக அறிமுகம் காணவில்லை. ஒரு அரசியல்வாதியாகவே அவரை உலகம் பார்த்தது அவரும் அப்படிதான் அறிமுகமானார். ஆனாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் அரசியல்வாதிகளுக்கும் காந்தி என்ற அரசியல்வாதிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருப்பது போல இருக்கிறது. உலகம் இதுவரை கண்ட அரசியல்வாதிகளில் எவருமே காந்தியை போல இல்லை அதற்கு காரணம் மற்ற அரசியல்வாதிகள் அரசியலையும் தர்மத்தையும் வேறு வேறாக பார்த்தார்கள் காந்தி இரண்டையும் ஒன்றாகவே பார்த்தார். வாழ்க்கை முழுவதையும் ஒரே அளவுகோல் கொண்டு அளக்க வேண்டும். அது ஒரே தத்துவத்தால் தீர்மானிக்கப்பட்டதாக இருக்க வேண்டுமென்று காந்தி மிக கண்டிப்பாக விரும்பினார்.
வாழ்க்கையின் அளவுகோல் என்பது பேராசையாகவோ அதிகார வெறியாகவோ இல்லாமல் மனித நேயம் என்னும் அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் அன்பை ஆதாரமாக கொண்டு அளந்து பார்த்தால் தான் சிக்கல்கள் ஒவ்வொன்றையும் யாருக்கும் பாதிப்பில்லாமல் நீக்கி கொள்ள முடியும். இல்லை என்றால் சிக்கல்களே மீண்டும் பெரிய சிக்கல்களாக உருவாகி விடும். அன்பு என்ற நதி தாளமுடியாத வெள்ளத்தால் தள்ளாடும் போது அது பக்தியாக உருமாறி இறைவனை நோக்கி பாய்ந்தோட துவங்கி விடும்.
அரசியல் என்பது என்ன? இன்று பலரும் அதை ஆட்சி செய்கின்ற கலை அதிகாரத்தை ஆணவத்தை தருகின்ற மலை என்று நினைக்கிறார்கள். அரசியல் அதுவல்ல. கோடிக்கணக்கான மக்களை அடிமை நிலையிலிருந்தும், அறியாமை நிலையிலிருந்தும் வறுமையிலிருந்தும் நோயிலிருந்தும் விடுதலை அடையச் செய்வதே அரசியலாகும். அதனால் அது பெளதீகமான இறைத் தொண்டாகும். இப்படித்தான் காந்தி அரசியலை கண்டார் அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாமல் தவிக்கும் மக்களை அசுர பலம் கொண்ட ஆதிக்க வெறியர்களால் ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கப்பட்ட மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை தான் வணங்குகின்ற இறைவனாகவே காந்தி பார்த்தார். இந்த திக்கற்ற ஜனங்களுக்கு செய்கின்ற தொண்டும் இறைவனுக்கு செய்கின்ற வழிபாடும் ஒன்றே என்பது காந்தியின் கோட்பாடாகும்.
அரசியல் என்று வந்துவிட்டாலே அதில் நீதி நியாயங்களை பார்க்காதே தர்மம் ஒழுக்கமென்று சிந்திக்காதே வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படு என்று பல அரசியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் நாம் மிகவும் மதிக்கின்ற அரிஸ்டாட்டில் சாணக்கியர் போன்றோரும் கூட இதே போன்ற கருத்துக்களைத்தான் தெரிவிக்கிறார்கள் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டால் அந்த அரசியலில் ஏமாற்றுதல் இருக்கும். சூழ்ச்சிகள் இருக்கும். வஞ்சகம், அதிகாரபோதை இன்னும் கொடுமையான அடிமைபடுத்தும் வெறி ஆகியவை மலிந்திருக்கும் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் அரசியல் சில நேரங்களில் உள்நாட்டில் நேர்மையானதாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஒருபோதும் அயல்நாட்டு உறவுகள் என்று வருகின்ற போது நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
ஆனால் காந்தி உள்நாட்டு உறவுகளில் மட்டுமல்ல வெளிநாட்டு உறவுகளிலும் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்கிறார். எல்லா நிலைகளிலும் மனித வாழ்க்கையானது அறிவு சார்ந்ததாக, அன்பு சார்ந்ததாக வன்முறை அற்றதாக இருக்க வேண்டுமானால் வெற்றி இலக்கு என்பதை இரண்டாம் பட்சமாக வைத்து தர்மமே இலக்கு என்பதை முதலாவதாக கொள்ளவேண்டும் என்பது காந்தியின் உறுதியாகும். உலக மக்கள் அனைவரையும் மனசாட்சி உடைய உலக தலைவர்கள் அனைவரையும் காந்தியை நோக்கி திரும்ப செய்தது அவரின் இந்த அறம் சார்ந்த அரசியல் கோட்பாடே எனலாம். அவர் தமது வாழ்க்கையில் ஒவ்வொரு முனையிலும் அனுபவப்பட்ட சோதித்தறிந்த உண்மைகளையே பொது வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தினார் மற்றவர்களும் நடைமுறை படுத்த வேண்டுமென்று விரும்பினார். அன்பாலும், உண்மையான செயலாலும் தீர்க்க முடியாத அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியும் என்று அவர் மெய்பித்து காட்டினார்.
பகைவரை அன்பால் வெல்ல வேண்டும், பொய்யை உண்மையால் வெல்ல வேண்டும், வன்முறையை தியாகத்தால் வெல்ல வேண்டும் என்ற இந்த காந்தியின் அணுகுமுறை மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் தெய்வீக சக்திகளை விழித்தெழ செய்துவிடும். மனிதன் விலங்குதன்மை வாய்ந்தவன் என்று கருதி அடக்குமுறை சிறைச்சாலை வன்செயல் அடிமை சங்கலி கொடும்தண்டனை போன்றவற்றை கொடுத்து அவனை மேலும் கீழ்மைப்படுத்த விரும்பினால் அவனுக்குள் இருந்து மேன்மேலும் வன்மமும் ஆத்திரமும் கிளம்புமே தவிர சாந்தியும் சமாதானமும் உருவாகவே செய்யாது என்கிறார். அஹிம்சை என்பதை தர்மம் என்பதை ஒரே நாள் இரவில் எல்லோருக்கும் உற்பத்தி செய்துவிட முடியாது படிப்படியாகத்தான் அது வளரும் எனவே அதற்கான பயிற்சியை ஒவ்வொருநாளும் மனிதன் எடுத்துக்கொண்டால் கெடுதியான உலகு நன்மையாகவே மாறிவிடும் என்பது காந்தியின் சிந்தனை.
மதம் என்பது கோவில் கட்டுவதிலேயோ, வழிபாடுகள் நிகழ்த்துவதிலேயே போற்றி பாடுவதிலேயோ நிறைவடைவது இல்லை. இந்த உலகம் தர்மத்தின் வழியிலேயே இயங்குகிறது அதை தர்மத்தாலேயே மேலும் இயக்க வேண்டும். என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு செயல்படுவதே உண்மையான மதம் என்று காந்தி கருதினார் மதத்தில் இருக்கிற போலித்தனமான கட்டுபாடுகளை உடைத்தெறிந்து நல்ல அற உணர்வுகளை வளர்த்து அதை அரசியலில் புகுத்தி மக்கள் வாழ்க்கையை செம்மைபடுத்த வேண்டும் என்பதை அவரது நோக்கமாகும் மனித நேயத்தை முதுகெலும்பாக கொண்ட காந்தியின் மதம் சாதி இனம் ஏழை பணக்காரன் என்ற வேறு பாடுகளை தவிடு பொடியாக சிதைத்து விட்டு மனித இனத்தை ஒன்றாகக வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு எழுந்து நிற்கிறது.
மதம் என்பது ஆத்மாவை வளர்க்கும் உரம் என்ற அடிப்படையில் மதம் இல்லாத அரசியல் சமுதாயத்தை படுபாதாளத்தில் தள்ளிவிடும் என்று காந்தி நமக்கு எச்சரிக்கை தர தயங்கவும் இல்லை. அதனால் தான் காந்தி மதம் என்பது ஒரு போதை மருந்து என்று சொன்ன காரல்மார்க்ஸ் தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு மதம் என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சு என்று கூறுகிறார். தனது செயல்பாடு கருத்துக்கள் அனைத்திலுமே மதம் கலந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் காந்தி எந்த ஒரு மதத்தையும் தனிமைப்படுத்தி சுட்டிக்காட்டவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அடைய வேண்டிய இலக்கை விட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளே மிக முக்கியம் தனி மனிதனின் செயல்பாடு துவங்கி அரசியல் செயல்பாடுகள் வரை சுத்தமான வழிமுறைகள் மட்டுமே கடைபிடிக்கப்பட வேண்டும் என்று காந்தி விரும்புகிறார். எந்த வழியில் சென்றாலும் பரவாயில்லை வெற்றி அடைந்தால் மட்டும் போதுமானது என்ற தத்துவத்தை காந்தி கபடத்தனமானது என்கிறார். நல்ல பாதையில் பயணம் செய்தும் இலக்கை அடையவில்லை என்றாலும் கூட அந்த தோல்வியே தர்மத்தின் வெற்றி என்பது காந்தியின் அனுபவம். வன்முறையாலும் அடக்குமுறையாலும் வஞ்சகத்தாலும் பெறுகின்ற வெற்றி ஒருபோதும் நிலைத்து நிற்காது. தர்மத்தின் வழியில் பெறுகின்ற வெற்றி இயற்கை சீற்றங்களுக்கும் அப்பாற்பட்டு நிலைத்து நிற்கும் என்கிறார்.
தனிமனிதனுடைய வாழ்க்கைக்கும் சமூகத்தின் நிலைபாட்டிற்கும் சம்மந்தம் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள் இதை காந்தி ஏற்று கொள்ளவில்லை சமூகத்தின் வாழ்வு சிதைந்து போகாமல் இருக்க வேண்டுமானால் தனிமனிதன் தர்ம ஒழுக்கத்தை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும். சமய உணர்ச்சியானது வெறியாக இல்லாமல் அன்பு மயமாக அரவணைக்கும் தன்மை உடையதாக ஒரு மனிதனிடம் வளர்ந்தால் அத்தகைய தனி மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமாக திகழ்ந்தால் அந்த சமூகம் ஆரோக்கியமுடையதாக அமையும் என்று காந்தி நம்பினார் இன்று உலகத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஜனநாயக அரசு பொதுவுடைமை அரசு சர்வதிகார அரசு போன்ற அரசுகள் எல்லாமே தண்டனையின் மூலமாக சட்டங்களின் மூலமாக ஒடுக்குமுறையின் மூலமாக மனித சமூகத்தை சீர்திருத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள்
ஆனால் தர்மம் என்பது இந்த நெறிகள் வழிமுறைகள் அனைத்திற்கும் மேலானது அது மனித நேயத்தால் மனிதனது அன்பால் இயங்குவதால் மனித குலத்திற்கே பொதுவானது அத்தகைய தர்மம் அரசு செய்தால் சட்டங்கள் வேண்டாம் காவல் நிலையங்கள் வேண்டாம் நீதிமன்றங்கள் சிறைச்சாலைகள் படைகள் ஆயுதங்கள் எதுவுமே வேண்டாம். சமூகம் தனியாக அமைதியாக சாந்த வழியில் எப்போதும் திகழும். இது தான் காந்தி கனவு கண்ட ராம ராஜ்யம். இந்த ராஜ்யம் வந்துவிட்டால் எங்கும் எதிலும் எப்போதும் அறம் மட்டுமே ஆட்சி செய்யும். இந்த ஆட்சியை நோக்கியே மனித சமூகம் நகர வேண்டுமென்று காந்தி விரும்பினார் நாம் அந்த தர்மத்தை நோக்கி செல்கிறோமா? இல்லையா? என்று சற்று சிந்தித்து பாருங்கள் இப்போது உலகம் கண்டுகொண்டிருக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் எது காரணம் என்று தெளிவாகத்தெரியும்.
காந்தியை பற்றியும் அவரது சிந்தனைகளை பற்றியும் குருஜி மிக விரிவாக கூறி முடித்தார். நமக்கு சில விஷயங்கள் புரிந்தன சிலவற்றை கடைபிடித்து பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் தோன்றின அனைத்தையும் இல்லையென்றாலும் ஒன்றையாவது உறுதியாக பற்றிக்கொள்ள மனம் துடித்தது எல்லாம்வல்ல இறைவன் அதற்கு துணை செய்ய வேண்டும்.