Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தியும் ராமரும்


யார் ஞானி 5

     காந்தியடிகளை பற்றிய இந்த தொடர் பதிவில் நியாயப்படி இப்போது அவரது அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் பற்றி குருஜி கூறிய விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் ஆனால் அப்படி செய்ய முடியாமல் மதுரை திறந்தவெளி பல்கலைக்கழகத்தை சேர்ந்த திரு.விஜயன் அவர்கள்  காந்தி நிச்சயமாக ஹிந்துத்துவா வாதியல்ல,ஆனால் அவர் நிச்சயமாக ஹிந்து விரோதி. அவரும்,நேருவும் சேர்ந்து செய்த செயலகளால் தான் இன்று ஹிந்துக்கள் படாத பாடு படுகின்றனர். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பிறகு அங்குள்ள ஹிந்துக்கள் அனைவரையும் பாரதத்திற்கு அழைத்துவந்துவிட்டு, இங்குள்ள முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடலாம் என்று பட்டேல் போன்றோர் காந்தியிடம் கூறினர். ஆனால் காந்தியோ தான் என்ற அகந்தையினால் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதன் பயனை மூன்று தலைமுறை கடந்த பின்னரும் கூட இன்றும் ஹிந்துக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆகவே காந்தி நிச்சயமாக ஹிந்துத்துவா வாதியல்ல, ஆனால் அவர் நிச்சயமாக ஹிந்து விரோதி என்ற கருத்தை மிக உறுதியான முறையில் பதிவு செய்திருந்தார். 

காந்தியை பற்றிய விமர்சனங்கள் அவர் காலத்திலிருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது காய்த்த மரம் கல்லடி படுமென்று கூறுவார்கள் அதை போல பல விமர்சனங்களை காந்தி சம்மந்தமாக எடுத்து கொள்வதாக இருந்தாலும் அவர் ஹிந்து விரோதி என்ற விமர்சனத்தை பதில் கூறாமல் ஒதுக்கி விடவும் மனது வரவில்லை. இந்த வார்த்தையும் இதன் பொருளும் மிகவும் ஆழமானது ஒரு மாபெரும் தலைவரை பற்றி இத்தகைய கருத்துக்கள் காரணமே இல்லாமல் உருவாக வேண்டிய அவசியமில்லை அதற்குள்ளும் ஏதாவது ஒரு உண்மை மறைந்திருக்கலாமோ? அதை அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டால் வருங்கால தலைமுறைக்கு சரியான தகவலை கூறாத பாவம் நமது தலையில் வந்து விடியும். 



இதுமட்டுமல்ல காந்தி ஹிந்துத்துவா வாதியா? என்ற நமது சென்ற பதிவிற்கு காந்தியின் செயல்பாடுகளில் பல குறைகள் உள்ளன. சீதாராமநாயுடுவின் தோல்வி என் தோல்வி என்று சொன்னது முதல் பிரிவினையின் போது பாகிஸ்தான் தரப்பில் உள்ள இந்துக்களை காக்க போதிய நடவடிக்கை எடுக்காதது போல் பல விஷயங்களை சொல்லலாம். இருப்பினும் காந்திஜியை இந்துவிரோதி என்றெல்லாம் பேசுவது பொருத்தமானது அல்ல. பொன்னால் உடைந்த கலம் உடைந்தாலும் ஓட்டையானாலும் பொன்தான். ஆகவே காந்திஜி அவர்கள் பசும்பொன் தான் பாத்திரம்தான். அதில் சில ஓட்டைகள் உள்ளன என்பதும் உண்மைதான். என்று சுகுமார் என்பவரும் கருத்து பதிவு செய்திருந்தார் திரு விஜயன் அவர்களின் கருத்தை படிக்கும் போது காந்தியின் மேல் வெறுப்பு வருகிறது என்றால் இரண்டாவதாக உள்ள சுகுமாரின் கருத்தை படிக்கும் போது போனால் போகட்டும் என்ற வகையில் காந்தியை ஏனோ தானோவென்று எண்ணத் தோன்றுகிறது. 

உண்மையில் காந்தியின் மேலாகட்டும் அல்லது சாதாரண மனிதர்களின் மேலாகட்டும் அவர்களை ஒட்டுமொத்தமாக வெறுப்பதும் அல்லது சகித்து கொள்வதும் பெரிய அபாயமாகும். எனவே காந்தியை பற்றி கூறப்படுகிற இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானது தானா? என்பதை அறிந்து கொள்ள குருஜியின் கருத்தை பெறுவதற்கு விரும்பினேன். இந்த இரண்டு கருத்துக்களையும் குருஜியிடம் காண்பித்த போது படித்து விட்டு அவர் மெளனமாக இருந்தார் பிறகு கண்ணாடியில் தன்முகத்தை பார்ப்பவன் அது அழகாக இல்லை என்பதற்கு கண்ணாடியை குற்றம் சொல்வது போல் இருக்கிறது. இந்த கருத்துக்கள் ஹிந்து, முஸ்லீம் கலவரங்கள் நடந்து வரும் போது காந்தி எதற்காக முஸ்லீம்களிடம் மட்டும் கருணை காட்டினார் ஹிந்துக்களை மட்டும் விட்டுக்கொடுத்து போகும்படி எதற்காக வற்புறுத்தினார் என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும் எந்த ஒரு கருத்தையும் அது சொல்லப்பட்ட காலத்து சூழலை அனுசரித்தே புரிந்து கொள்ள முயற்சி செய்வது தான் புத்திசாலிகளுக்கு அழகு. கருத்துக்களை மட்டுமே பார்ப்பேன் சூழலை பற்றி கவலை இல்லை என்று வாதிடுவது விதண்டாவாதம். 



காந்தி, இந்த மாதிரியான கருத்துக்களை கூறும் போது இந்த நாட்டில் வெள்ளைக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்தியாவை சுரண்டி பிழைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டிய வெள்ளையர்கள் பலர் பிரிட்டிஷ் ஆட்சி இங்கிருந்து போய்விட்டால் இந்தியா சிதறிவிடும். மத கலவரங்களால் மக்கள் மாண்டு போவார்கள். மனிதநேயம், மனிதாபிமானம் எல்லாமே குழிதோண்டி புதைக்க பட்டுவிடும் என்று அயல்நாடுகளில் பிரச்சாரம் செய்து வந்தார்கள் இதுமட்டும் அல்ல நாட்டில் நிரந்தரமான குழப்பங்களை ஏற்படுத்த வேண்டுமென்று ஜின்னாவை பயன்படுத்தி ஹிந்து முஸ்லீம் விரிசல்களை வட இந்தியாவிலும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்ற பிளவை பெரியார் அவர்களை கொண்டு தெற்கிலும் அரங்கேற்றி கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் காந்தியும் முஸ்லீம்களின் செயலை கண்டனம் செய்திருந்தால் சர்வதேச அரங்கில் வெள்ளைக்காரர்களின் போலியான நியாய தர்மங்கள் எடுபட்டு இந்தியர்களின் சுதந்திர தாகம் அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். 

இந்துக்கள் இந்த நாட்டின் பிரதான மக்கள். ஒரு குடும்பத்தில் மூத்த அண்ணனுக்கு என்ன பொறுப்பு உண்டோ? அந்த பொறுப்பு இந்தியாவில் ஹிந்துக்களுக்கு உண்டு இளைய தம்பிகளுக்காக பெரியவன் சற்று விட்டு கொடுத்து போனால் சில இழப்புகளை தாங்கி கொண்டால் ஒன்றும் பெரிய துயரம் நடந்து விட போவதில்லை குடும்ப நிலை என்பது கேடு அடையாமல் பாதுகாக்க படும். தனிமனித உரிமைகளை விட ஒரு நிறுவனத்தின் ஆயுள் முக்கியம் நிறுவனத்தின் ஆயுளை விட தேசத்தின் ஆன்மா முக்கியம் பாரத நாட்டின் ஆத்ம சுதந்திரத்திற்காகவே காந்தி தானும் பொறுத்து மற்றவர்களையும் பொறுக்க சொன்னாரே தவிர தானென்ற அகங்காரத்தில் பொறுமை பாராட்டவில்லை நம்மையும் பாராட்ட அனுமதிக்கவில்லை என்று பதில் சொல்லிய குருஜி காந்தியின் சனாதன தர்மத்தின் காந்தியின் வடிவத்தை விளக்க வேறொரு கருத்தை முன் வைத்தார். 

ராம நாமம் பரவுவதும், திறமையுமான வாழ்க்கையுமே தலை சிறந்த மருந்தாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பரிதாபகரமான விஷயம் என்னவென்றால் டாக்டர்களும் வைத்தியர்களும் ராமநாமத்தை நல்ல மருந்தாக பயன்படுத்தாமல் இருப்பதே ஆகும். இப்போது. எழுதபடுகிற ஆயுர்வேதே வைத்திய சாஸ்திர நூல்களில் எதிலும் ராம நாமத்திற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவே இல்லை அந்த மந்திரம் எதோ மாய மந்திரம் போலவே பார்க்கப்படுகிறது இதன் விளைவாக மக்கள் இன்னும் விரைவாக மூட நம்பிக்கை என்ற பாழும் கிணற்றில் குதித்த வண்ணமே இருக்கிறார்கள். உண்மையில் ராம நாமத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது அது இயற்கையின் தலையாய நியதி அதை யார் கடைபிடித்தாலும் நோயிலிருந்து விடுதலை அடைவார்கள். கடைபிடிக்காதவர்கள் அதற்கு நேர்மாறான நிலையை அடைவார்கள். 

ராம நாமத்தை அனுதினமும் சொல்லிக்கொண்டு எளிமையான, நேர்மையான வாழ்க்கை வாழுபவர்களுக்கு கூட சில சமயங்களில் நோய் வருகிறதே அது ஏன் என்று சிலருக்கு கேட்க தோன்றும். இதற்கு பதில் மனிதன் இயற்கையில் பரிபூரணமானவனாக இல்லை. சிந்தனை உள்ள மனிதன் பூரணத்தை அடைய பாடுபடுகிறான். ஆனால் அதை ஒருபோதும் அடைய முடியாமல் தவிக்கிறான் செல்லும் மார்க்கத்தில் தன்னை அறியாமல் தடுமாறுகிறான் தூய வாழ்க்கையே முழுமையான தெய்வ நியதியின் வடிவமாகும். இயற்கையின் நியதி, வாழ்க்கைக்குள் வருவதற்கு ராம நாமம் மட்டுமே துணை செய்யும். மனதும், வார்த்தையும் மற்றும் உடம்பும் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் இணையும் போது மட்டுமே ராம நாம சத்தியின் அலை உடல் முழுவதும் பரவுகிறது. அதனாலேயே அது நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று காந்தி கூறுவதை மிக கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். 

ஹிந்து மதம் என்பது வெளி உபயோகத்திற்கு மட்டுமே உள்ள மருந்து அல்ல ஹிந்து மதம் உடம்பையும் தாண்டி ஆத்மாவை செப்பனிடுகிற கருவியாகும். காலையில் எழுந்து கடவுளை தொழுது காரியங்களை செய்கின்ற புறச்செயல்களை மட்டுமே இந்துமதம் வலியுறுத்துவது இல்லை. நீ காலம் நேரம் பார்க்காமல், கடுந்தவங்கள் செய்யாமல், பூஜை வழிபாடு என்று போகாமல் கண்ணிமைக்கும் நேரம் கூட கடவுளை பற்றி சிந்திக்காமல் வாழ்ந்தால் அது பாவமல்ல. அதனால் நீ இறைவனிடமிருந்து தள்ளி போகமாட்டாய் உன் ஆன்மாவின் அசுத்தம் ஏற்பட்டால் மட்டுமே கடவுளும் நீனும் எட்டாவே முடியாத இடைவெளியில் பட்டுப்போவாய் ஆத்மாவை சுத்தமாக வை. அப்போது மட்டுமே கடவுள் உன்னோடு இருப்பான் என்று கூறுவது தான் ஹிந்து தர்மம். காந்தியின் மனதை எந்த அளவு ஹிந்து தர்மம் ஈர்த்து இருந்தால் அவர் ராம நாமம் ஒன்றே சிறந்த மருந்து என்ற முடிவுக்கு வருவார்? 

ராமன் மீது காந்தி கொண்ட பற்று மீராவும், ஆண்டாளும் கண்ணன் மீது கொண்ட காதலுக்கு இணையானது என்று சொல்லலாம். காந்தி ராமனை தசரத குமாரனனாக தசமுக மர்தனாக மட்டும் பார்க்கவில்லை பரம்பொருளின் வடிவாகவே பார்த்தார். ராம மந்திரத்தில் தனது ஊனையும் உள்ளத்தையும் உதிரத்தையும் உருகவைத்திருந்தார். மரணத்தை தருகிற துப்பாக்கி முனை நம்மை நோக்கி நீண்டால் அந்த நேரம் நமக்கு தப்பித்து ஓட தோன்றுமே தவிர நியாய தர்மங்கள் எதுவுமே தென்படாது. நான் அந்த கடவுளை பக்தி செய்கிறேன், இந்த கடவுளுக்கு தொழுகை செய்கிறேன் என்பதெல்லாம் மறந்து போய் வார்த்தை குளறி பித்துபிடித்தது போல் ஆகிவிடுவோம். ஆனால் அப்படி ஆகாமல் துப்பாக்கி முனை தன்னை நோக்கி முறைத்த போதும் அதிலிருந்து காலதேவனின் கணைகள் என குண்டுகள் பறந்துவந்து தனது மார்பை துளைத்த போதும் காந்தி “ஹே ராம்” என்று தான் சொன்னாரே தவிர ஐயோ வலிக்கிறது என்று கதறவில்லை.



காந்தி மனதில் ஹிந்து தர்மத்தின் ஆதார வேர் எந்த அளவு ஆழமாக பாய்ந்திருந்தால் மரணத்தின் போது கூட அதன் அடிப்படை தத்துவத்தை கைவிடாமல் கடைப்பிடித்து இருப்பார்? ஹிந்து நேசம் என்பது ஹிந்துக்களை மட்டுமே நேசிப்பது அல்ல. ஹிந்துக்களை போலவே அனைவரையும் ஒன்றாக கருதி நேசிக்கும் பண்பே ஹிந்து நேசமாகும். ஒரு உண்மையான ஹிந்துத்துவா வாதி ஒரு மனிதனை மனிதனாக பார்ப்பானே தவிர மதமாக பார்க்க மாட்டான் நவகாளியில் பலியான உயிர்கள் அவருக்கு உயிர்களாகத்தான் தெரிந்ததே தவிர ஹிந்துவாகவோ முஸ்லீமாகவோ தெரியவில்லை அதனால் தான் அவர் அனைவருக்குமான அமைதியை வேண்டி உண்ணா நோன்பு இருந்தார். காந்திமட்டும் அன்று ஹிந்து தர்மத்தின் இதயமான அஹிம்சையை சற்று கைநழுவ விட்டிருந்தால் இன்று இந்தியாவை சுற்றி வட்டமிடும் அரேபிய, ஐரோப்பிய கழுகுகள் நம்மை கொத்தி கிழித்து தங்கள் கொழுத்த உடலுக்கு உரமாக மாற்றிருக்கும். ஒரு தேசத்தின் நீடிய ஆயுள் எதிலிருக்கிறது என்று தலைவர்களுக்கு தெரியாது மகான்களுக்கு மட்டுமே தெரியும். பாரதியார் சொன்னது போல் காந்தி, மகாத்மா மட்டுமல்ல மகானும் ஆவார். அவர் எதற்கும் விரோதி அல்ல யாருக்கும் பகைவர் அல்லர்.



Contact Form

Name

Email *

Message *