யார் ஞானி 3
சத்தியமும், தர்மமும் கடவுளே! என்று சொல்கிறீர்களே? அது எப்படி என காந்தியிடம் கேட்டதாகவும், அதற்கு காந்தி பதில் கூறியதாகவும் சென்ற பதிவில் படித்தோம். காந்தி சொன்ன பதில் என்ன? என்பதை குருஜி வழியாக அவரது பாணியில் கேட்போம்.
குருஜி:-
கடவுளுக்கு பெயரும் கிடையாது, ஊரும் கிடையாது. ஆனாலும் அவரை ஆயிரம் பெயர்களால் அழைக்கிறோம். ஓராயிரம் பெயரால் அவர் அழைக்கப்பட்டாலும், அந்த பெயர்கள் கடவுளை பொறுத்தவரை முடிவானவைகள் அல்ல. இன்னும், இன்னும் ஆயிரம் பெயர்களால அழைத்து கொண்டே போகலாம். உலகில் எத்தனை உயிரினங்கள் இருக்கின்றதோ! அத்தனை பெயர்கள் இறைவனுக்கு உண்டு. அதனால் தான் கடவுளை பெயரில்லாதவன் என்று அழைக்கிறோம். அதே போல கடவுளுக்கு பல உருவங்கள் இருக்கிறது. இன்ன உருவம் தான் கடவுளின் உருவமென்று ஒன்றே ஒன்றை மட்டும் நம்மால் அறுதியிட்டு கூற இயலாது. நாம் காட்டுகிற உருவமும், காட்டாத உருவமும் கடவுளின் வடிவமே ஆகும். இப்படி இன்ன வடிவமே கடவுளின் வடிவமென்று முடிவாக கூற இயலாததால் அவருக்கு உருவமே இல்லை என்றும் சொல்கிறோம். மனிதர்களும் மற்ற ஜீவ ராசிகளும் என்ன மொழியில் பேசுகின்றனவோ அத்தனை மொழிகளிலும் கடவுள் பேசுகிறார் அதனால் தான் அவரை மெளனி என்று அழைக்கிறோம்.
கடவுள் அன்பு வடிவானவன். “அன்பே கடவுள்” என்று கூறினால் நானும் அது தான் உண்மை என்று சொல்லுவேன். கடவுள் அன்பாகவும் இருக்கலாம், அன்பாக இருக்கின்ற கடவுள் அன்பை விட மிகவும் மேலானதான சத்தியமாக இருக்க மாட்டாரா? இன்று மனிதனால் பேசப்படுகிற மொழிகளில் கடவுளின் கல்யாண குணத்தை உள்ளது உள்ளபடி வர்ணனை செய்ய முடியுமானால் என் சம்மந்தபட்டவரையில் சத்தியமே கடவுள் என்ற முடிவிற்கு நான் வருவேன். இடைவிடாமலும் சோர்வில்லாமலும் ஒவ்வொரு நிமிடமும் ஆராய்ந்ததன் முடிவாக இந்த தெளிவை நான் பெற்றேன். சத்தியம் தான் கடவுள் என்றால் சத்தியம் மட்டுமே கடவுளின் வாசஸ்தலம் என்றால் “அன்பு” என்ற ஒரு பாதையின் வழியாகத்தான் கடவுளை அடையமுடியும்.
அன்பு என்பதற்கு ஆங்கில மொழியில் லவ் அல்லது காதல் என்ற பொருளை தருகிறார்கள். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயிரம் சமாதானம் கூறினாலும் காதல் என்பது உடல் சம்மந்தத்தோடு வருவது நிச்சயம். அன்பு உடம்பிற்கு அப்பாற்பட்டது. எனவே அன்பை ஆங்கில வார்த்தையில் இழிவு படுத்தி விட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். எனவே தான் நான் அந்த வார்த்தையை பயன்படுத்துவதற்கு யோசிக்கிறேன். உண்மையில் அன்பு காதல் சம்மந்தபட்டது அல்ல. அது அஹிம்சை சம்மந்தபட்டது. அன்பு தான் கடவுள், சத்தியம் தான் கடவுள், உண்மை தான் கடவுள். இந்த உண்மையை நாத்திகர்கள் கூட மறுக்க மாட்டார்கள். நாத்திகர்கள் சத்தியத்தை வலியுறுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதனாலேயே கடவுளை மறந்து விட்டார்கள் என்று கூட எனக்கு தோன்றுகிறது.
அன்பே வடிவான கடவுளின் பெயரால், சத்தியமே வடிவான இறைவனின் பெயரால் வார்த்தைகளில் சொல்ல முடியாத கொடுமைகள் பல இந்த உலகத்தில் நடந்து வருகிறது. அதனால் கடவுளே வேண்டாம் விஞ்ஞானம் போதும் என்ற முடிவிற்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாது. உண்மையை அறிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகளும் அடிக்கடி கொடுமைகளை செய்து வருகிறார்கள். விஞ்ஞான காரணங்களுக்காக, ஆய்வுகளுக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி விலங்குகளை அறுத்து சோதனை செய்யும் போது மனித தன்மையற்ற பல கொடுமைகள் அவைகளுக்கு செய்யபடுகிறது. கடவுளையும் விஞ்ஞானத்தையும் சத்தியத்திற்காக மட்டுமே விரதமாக மேற்கொண்டால் கொடுமை என்பதே நிகழாது.
இந்து மத தத்துவத்தில் வேறொரு விஷயமும் இருக்கிறது. இந்து மதம் சொல்கிறது கடவுள் மட்டுமே இருக்கிறார், வேறு எதுவும் இல்லை என்று. அதனால் தான் “ஸத்” என்ற வடமொழி சொல்லால் இறைவன் அழைக்கப்படுகிறான். “ஸத்” என்ற வார்த்தையின் பொருள் இருக்கிறது என்பதாகும். இத்தோடு “ஸத்” என்பதில் சத்தியம் அடங்கி விடுகிறது. அதாவது சத்தியமே கடவுளாகி விடுகிறது. இதே போன்ற பல காரணங்களால் தான் கடவுள் என்பதும், சத்தியம் என்பதும் ஒன்றே! என்ற முடிவிற்கு நான் வந்தேன். அந்த முடிவு தான் எனக்கு மகத்தான ஆனந்தத்தை தருகிறது. நீங்களும் ஆனந்தமாக இருக்க விரும்பினால் கடவுளை சத்திய வடிவாக தரிசனம் செய்ய முயலுங்கள். சத்தியமான இறைவனை தரிசனம் செய்வதற்கு அன்பு ஒன்றே அஹிம்சை ஒன்றே சரியான வழி.
சத்தியமே கடவுள் என்று மட்டும் காந்தி கூறவில்லை. அந்த சத்தியத்தை கடவுளை அடைவதற்கான வழி இன்னது தான் என்பதையும் காந்தி மிக தெளிவாகவே நமக்கு கூறி இருக்கிறார். உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நேசிப்பது மட்டுமல்ல, அனைத்து உயிர்களையும், குறைகளையும், குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு திருத்த முயற்சி செய்வதே கடவுளை அடையும் அஹிம்சை பாதை என்பதை காந்தி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரிடம் சத்தியமும் கடவுளும் ஒன்று தான் என்பது சரி அந்த சத்தியம் என்பது என்ன அதை எளிமையாக உணர்ந்து கொள்ள என்ன வழி என்றும் கேட்கப்பட்டது அதற்கும் காந்தி மிக அழகான பதிலை தந்திருக்கிறார் .
உன்னை பற்றி உன் நண்பனுக்கு தெரிவதை விட, உன் மனைவிக்கு தெரிவதை விட, உன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு தெரிவதை விட, உன்னை உனக்கு மிக நன்றாக தெரியும். நீ செய்வதில் சரி எது? தவறு எது? என்பதை உன் இதயத்தில் ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் எச்சரித்த வண்ணமே இருக்குமே அந்த இதயக்குரலே சத்தியம் என்பது இப்படி சாஸ்திர நூல்களோ, சட்ட அறிஞர்களோ சொல்லவில்லை என்பது அனுபவத்தில் எனது பரிசோதனையில் நானே தெரிந்து கொண்டேன். அப்படியானால் சத்தியத்தை பற்றி பல்வேறு மக்களும் பல்வேறு விதமாக சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்துவிட மாட்டார்களா என்று நீங்கள் கேட்பது புரியாமல் இல்லை. மனிதர்களின் உள்ளம் இப்படிதான் இயங்கும், இத்தனை சிந்தனைகளை தான் செய்யும் என்று யாரும் கணக்கு போட முடியாது. மனதின் மலர்ச்சியும், வளர்ச்சியும் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பது இல்லை. இந்த வகையில் ஒருவருக்கு உண்மையாகவும், சரியாகவும் தெரிவது மற்றவருக்கு தவறாக தெரிகிறது.
இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு இதயத்தின் குரலை உண்மையானதாக கேட்பதற்கு சில பரிசோதனைகள் இருக்கிறது. அந்த பரிசோதனைகளை படிப்படியாக செய்து வருவோம் என்றால் நம் இதயக்குரல் நமக்கு நன்மையானதை மட்டும் கூறாது. ஒரு ஆசிரியன் மாணவனை திருத்துவதற்கு பிரம்படி கொடுப்பது போல, இதயக்குரலும் உண்மையை உண்மையாக பேசி, நம்மை சத்திய வழியில் நடத்தி செல்லும். நமது ஆத்மாவின் குரலை கேட்பதற்கு முன்பு நமது எல்லைகளை சரியான முறையில் வகுத்துக் கொள்ள வேண்டும். அப்படி வகுத்தால் மட்டுமே சத்திய தரிசனம் சாத்தியமாகும்.
சத்தியத்தை தரிசனம் செய்வதற்கு பரிசோதனைகள் இருப்பதாக சொன்னேன். அந்த பரிசோதனைகளில் மிக முக்கியமானது எந்த நிலையிலும், எத்தனை சோதனை வந்தாலும், உண்மையை மட்டுமே பேசுவது என்ற விரதம். அடுத்ததாக அஹிம்சை விரதம். அஹிம்சை விரதத்தை சுலபமாக மேற்கொள்வதற்கு ஏழ்மை விரதமும் மிக அதிகமான பொருள்களை வைத்துகொள்வதில்லை என்ற எளிமை விரதமும் அவசியம். இவற்றோடு புலனை அடக்கி உடலின் மொழிக்கு மனம் கட்டுபடாமல் இருக்கின்ற பிரம்மச்சரிய விரதமும் அவசியம் ஏனென்றால் சத்தியத்தை உணர்ந்து கொள்வதின் ஆத்மார்த்தமான உங்கள் எதிர்பார்ப்பை கடவுளுக்கு நீங்கள் தெளிவாக காட்ட வேண்டும் அல்லவா? அதனால் இந்த விரதங்கள் மிகவும் அவசியம்.
மனசாட்சியின் குரலை கேட்பதற்கு இத்தனை விரதங்கள் அவசியமா? என்று சிலருக்கு தோன்றும். நமது மனமும், உணர்வுகளும் குழப்பத்தில் சிக்கக்கூடியது. ஒரே நேரத்தில் ஒரே வசத்தில் நிற்காது. நம்மை அறியாமலே நம்மை பற்று என்ற சேற்றுக்குள் தள்ளிவிட கூடியது. எனவே இந்த விரதங்கள் மிக கண்டிப்பாக அவசியம். அடுக்கடுக்கான நெருப்பு சூடு தங்கத்தை ஜொலிக்க செய்வது போல இந்த விரதங்கள் மனிதனை புடம்போட்டு சத்தியத்தின் பால் ஈர்க்க வைக்கிறது. உள்ளத்தில் உண்மை ஒளியை ஏற்றாமல், சத்திய தரிசனம் என்பது முடியாது. தன்னை ஒழுங்கு படுத்தாமல் கடவுளை கண்டேன் என்று கூறுபவன் தன்னையும் ஏமாற்றி, மற்றவர்களையும் ஏமாற்றுவது போல் விரதமில்லாத அஹிம்சை பயிற்சி தத்துவத்தை காட்டாது.
நமது இந்துமதத்தில் இறைவனை அடைவதற்கு கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்று நான்கு வகை யோகங்கள் கூறப்படுகின்றன. முற்றிலும் மாறுபட்ட இந்த நான்கு யோகங்கள் கடவுள் ஒருவரை அடைவதற்காக வகுக்கப்பட்ட வழிகளே ஆகும். காந்தி கூறுகிற சத்திய தரிசனம் என்ற இறை தரிசனத்தை அடைவதற்கு அவர் தத்துவங்களை மட்டும் நமக்கு தரவில்லை மிக எளிமையான அதே நேரம் வலிமையான நடைமுறை வழக்கத்தையும் நமக்கு தருகிறார். இது தான் காந்தியின் சிறப்பு. இந்திய ஞானிகளின் உயர்வு.